இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருடன் இலங்கையின் அவசர ஆற்றல் தேவைகள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருடன் இலங்கையின் அவசர ஆற்றல் தேவைகள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான அவசர விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். புதுதில்லியில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சில் ஜூன் 27ஆந் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு தொடர்பாக இலங்கை தற்போது எதிர்நோக்கும் கடுமையான சவால்கள் மற்றும் மக்கள் படும் கடுமையான இன்னல்கள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் பூரிக்கு விளக்கினார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவினால் கடனடிப்படையில் வழங்கப்பட்டுள்ள உதவிக்கு நன்றிகளைத் தெரிவித்த இலங்கை உயர்ஸ்தானிகர், தற்போது இலங்கைக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசல் விநியோகங்களை அவசரகால அடிப்படையில் பாதுகாப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் பூரியுடன் கலந்துரையாடினார்.இது தொடர்பாக சாதகமாக பதிலளித்த அமைச்சர் பூரி, இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.

உயர்ஸ்தானிகரும் அமைச்சரும் உடனடி நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்கும் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியாவும் இலங்கையும் பெற்றோலியத் துறையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர். இந்த நிலையில், உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் அமைச்சர் பூரி ஆகியோர் பெட்ரோலியம், எண்ணெய், எரிவாயு மற்றும் தொடர்புடைய தளவாடத் துறைகளில் இலங்கை நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2022 ஜூன் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close