சீனா - இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு சம்மேளனத்துடன் இணைந்து பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் சீன - இலங்கை பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் பரிவர்த்தனை மாநாட்டை 2021 அக்டோபர் 26ஆந் திகதி தூதரகத்தில் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு முக்கியமாக சீன முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா இயக்குனர்களிடையே முதலீட்டு வாய்ப்புக்கள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. சி.எஸ்.கே. இன்டஸ்ட்ரி குரூப், ஹூனான் கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினியரிங் குரூப், கைசா ட்ரவல் குரூப் மற்றும் யுவான்ஸ் சீட் கம்பனி லிமிடட் உட்பட முன்னணி சீன நிறுவனங்களின் அதிகாரிகள், வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீன - இலங்கை சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முதலீடு, வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் ஏனைய துறைகளில் இலங்கையில் நிலவும் வாய்ப்புக்களை முன்னிலைப்படுத்தும் முக்கிய உரையை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன நிகழ்த்தினார். சீன மற்றும் இலங்கை நிறுவனங்கள் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், அவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டார். இலங்கை சுற்றுலாத்துறையானது சீன சுற்றுலா நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும், இலங்கைக்கு விஜயம் செய்யுரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைந்தது ஒரு மில்லியனாக அதிகரிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, சி.எஸ்.கே. இன்டஸ்ட்ரி குரூப் மற்றும் ஹூனான் கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினியரிங் குரூப் ஆகியவற்றுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீனா - இலங்கை சங்கம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது. இலங்கையைச் சேர்ந்த தொழில்வாண்மையாளருக்குச் சொந்தமான பெய்ஜிங் ஸ்ரீ ரோட் டிரேடிங் கோ. லிமிடெட், குவாங்சோவிலிருந்து வரும் அதிவேக ரயில்களில் இனிப்புத் திண்பண்டங்கள் உட்பட இலங்கை சிற்றுண்டிகளை விளம்பரப்படுத்தி, சந்தைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹூனான் கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினியரிங் குரூப்புடன் கைச்சாத்திட்டது.
சுவையான மதிய உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்
2021 அக்டோபர் 29