மனித உரிமைகள் பேரவையின் பக்க அம்சமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜெனிவாவில் பல சந்திப்புக்களில் பங்கேற்பு

 மனித உரிமைகள் பேரவையின் பக்க அம்சமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜெனிவாவில் பல சந்திப்புக்களில் பங்கேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்களின் தலைமையிலான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் கலந்துகொண்ட இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு, பாகிஸ்தான், பலஸ்தீனம், தென்னாபிரிக்கா, சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை 2022 மார்ச் 01ஆந் திகதி சந்தித்தது.

பலஸ்தீன வெளிநாட்டு அமைச்சர் ரிசாத் அல் மாலிகியுடனான சந்திப்பின் போது, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் தூண்களில் பலஸ்தீனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளும் ஒன்றாகும் என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். பலஸ்தீனம் இலங்கையின் நம்பகமான நட்பு நாடாகும் எனக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் சுமுகமான உறவுகளுக்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் இலங்கையின் நீண்டகால நட்புறவு மற்றும் ஆதரவு குறித்து பலஸ்தீனத்தின் வெளிநாட்டு அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரு அமைச்சர்களும் மேலும் கலந்துரையாடினர்.

பாகிஸ்தானின் மனித உரிமைகளுக்கான மத்திய அமைச்சர் ஷிரீன் எம். மஸாரியுடனான சந்திப்பின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கல்வி, கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தை உள்ளடக்கிய நீண்ட கால மற்றும் உறுதியான நட்புறவு மற்றும் பன்முக உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் ஈடுபாடு குறித்தும் கலந்துரையாடிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், பாகிஸ்தானின் நிலையான ஆதரவிற்காக இலங்கையின் உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்தார். மனித உரிமைகளின் பின்னணியில், உள்நாட்டு செயன்முறையின் அடிப்படையிலான இலங்கையின் சாதனைகளை பாகிஸ்தான் மத்திய அமைச்சர் பாராட்டினார். சுற்றுலாத் துறையில் இலங்கையின் முன்முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டோருடன் ஈடுபட்ட ஆக்கபூர்வமான சந்திப்பின் போது, இலங்கையின் நல்லிணக்கம், ஐக்கியம் மற்றும் உண்மையைத் தேடுதல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் சார்ந்த தென்னாபிரிக்காவின் வளமான அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வது தொடர்பான முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் அபிவிருத்திகளைப் பாராட்டிய தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் அமைச்சர், நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்கான தென்னாபிரிக்காவின் தயார்நிலையையும் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் எகிப்தின் வெளிநாட்டு அலுவல்கள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் காலிட் எல் பக்ரியுடன் கலந்துரையாடியதுடன், அதன் போது மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அமர்வில் அன்றைய தினம் பேராசிரியர் பீரிஸ் மேற்கொண்ட அறிக்கையில் அவர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டதாக எகிப்திய பிரதி அமைச்சர் வெளிப்படுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close