தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மை - ஆழ்கடல்களைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா. உடன்படிக்கையை இலங்கை வரவேற்பு

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மை – ஆழ்கடல்களைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா. உடன்படிக்கையை இலங்கை வரவேற்பு

கடலின் நிலையான பயன்பாடு, அதன் நிர்வாகம் மற்றும் பல்லுயிரியலை மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியமாகப் பாதுகாக்கும் ஒரு தீவு தேசமாக,  ஆழ்கடல்களில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச சட்ட ஆட்சியை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தமையை இலங்கை வரவேற்கின்றது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் மார்ச் 04ஆந் திகத நிறைவடைந்த இந்த ஒப்பந்தம், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள கடலின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியதாக அமைவதுடன், கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிறுவி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்து, ஆழ்கடல்களின் கடல் மரபணு வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கட்டமைப்பை வழங்குகின்றது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் திறன் விருத்தி சார்ந்த திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மை ஒப்பந்தத்தின் கீழ் அபிவிருத்தியடைந்த நாடுகளின் அர்ப்பணிப்பை இலங்கை வரவேற்கின்றது. நியாயமான மற்றும் சமமான முறையில் ஒப்பந்தத்தில் இருந்து பயனடைவதற்காக, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு  திறன் விருத்தி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம், அறிவுப் பகிர்வு மற்றும் உரிமைகள் மற்றும் பொறுப்புக்களை அர்த்தமுள்ள முறையில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு அவசியமாகும். மாநாட்டில் இந்த விளைவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதற்கு பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் பங்கேற்பு உதவியது.

ஆழ்கடல்களில் உள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கும் தேசிய அதிகார வரம்பு மற்றும் பொருளாதாரங்களின் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடல் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பைக் கருத்தில் கொண்டு, தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மையை நடைமுறைப்படுத்துவது, இலங்கையின் தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட கடல் பல்லுயிர்ப் பகுதிகளின் நிலையான பயன்பாட்டிற்கு பங்களிக்கும் அதே வேளையில்,  கடல் மட்ட உயர்வு, கடல் மாசுபாடு மற்றும் கடல் வளங்களை சுரண்டுதல் ஆகியவற்றின் மூலம் கடலில் ஏற்படும் பாதகமான தாக்கங்களைக் குறைக்கும்.

பிராந்தியத்திற்குள் பொருத்தமான பிரச்சினைகளில் பிராந்திய உரையாடலை வளர்ப்பதன் மூலம் கடல் நிர்வாகத்திற்கான தனது அர்ப்பணிப்பை இலங்கை நிரூபித்துள்ளது. 2027ஆம் ஆண்டு வரை கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் தலைவராக இலங்கை விளங்குகின்ற அதே வேளை, 2021-2023ஆம் ஆண்டுக்கான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவராகவும் இந்த ஆண்டு இந்து  சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவராகவும் பதவியேற்கவுள்ளது. 2021 இல் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாட்டில் இலங்கை தனது கடல் இருப்புக்களில் குறைந்தபட்சம் 30% ஐ பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது.

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மை என்பது ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் கீழான  மற்றொரு அடையாளமான அமைவதுடன், இதில் இலங்கை ஆக்கபூர்வமான பங்கை வகித்துள்ளது. தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மையை முறையான வகையில் அணுகி, அங்கீகரித்து, செயற்படுத்துவதானது, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக உலகளாவிய பொதுமையின் ஒரு பகுதியாக கடலைப் பாதுகாக்கும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மார்ச் 09

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close