மொண்டினீக்ரோவுக்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமனம் செய்யும் நற்சான்றிதழ் கடிதங்களை தூதுவர் மனோரி உனம்புவே செட்டின்ஜேவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து மொண்டினீக்ரோ குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மிலோ டுகானோவிக்கிடம் கையளித்தார்.
இந்த விழாவில் மொண்டினீக்ரோ ஆயுதப் படைகளின் கௌரவ அணிவகுப்பு மரியாதை, நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தல் மற்றும் ஜனாதிபதி மிலோ டுகானோவிக் மற்றும் அவரது முக்கிய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன. தூதுவருடன் தூதரகத்தின் முதல் செயலாளர் திருமதி. புத்திகா விமலசேனவும் கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மனோரி உனம்புவே, முன்னாள் யூகோஸ்லாவியா சோசலிச கூட்டரசின் காலத்தில், குறிப்பாக அணிசேரா இயக்கத்தின் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய விதிவிலக்கான உறவை நினைவு கூர்ந்தார். ஜனாதிபதி டுகானோவிக் இலங்கை ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
தூதுவர் நாட்டின் வர்த்தக நட்புச் சூழலை எடுத்துக்காட்டியதுடன், இலங்கையில் முதலீடு செய்வதற்கான சர்வதேச வர்த்தக சமூகத்தின் அதிகரித்துவரும் ஆர்வம் குறித்தும் கவனத்தை ஈர்த்த அதே வேளை, புதிய வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியமான ஒத்துழைப்பின் பகுதிகள் குறித்தும் விளக்கினார்.
மொண்டினீக்ரோ குடியரசிற்கான அங்கீகாரத்தை ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுள்ளது.
இலங்கைத் தூதரகம்,
பேர்லின்
2021 நவம்பர் 09