ரஷ்யக் கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, வெளிநாடுகளைச் சேர்ந்த 19 தூதுவர்களுடன் இணைந்து ரஷ்யக் கூட்டமைப்பின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை 2021 டிசம்பர் 01ஆந் திகதி கையளித்தார்.
பாரம்பரியத்தைப் பின்பற்றி, கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையின் அலெக்சாண்டர் மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது. இருப்பினும், சாதகமற்ற தொற்றுநோய் நிலைமையின் காரணமாக ரஷ்யாவில் இராஜதந்திர வாழ்க்கையைத் தொடங்குவதற்கான நெறிமுறை விழா வரையறுக்கப்பட்ட முறையில் நடைபெற்றது.
இலங்கை குறித்து உரையாற்றிய ஜனாதிபதி புடின், 'அடுத்த ஆண்டு, இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவோம். வெளிநாட்டு அமைச்சுக்கள், பாதுகாப்பு அமைச்சுக்கள் மற்றும் பொருளாதாரக் குழுவின் அமைச்சுக்கள் மற்றும் பாராளுமன்றங்களுக்கு இடையே சிறந்த தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் நவம்பர் 22ஆந் திகதி கொழும்புக்கு விஜயம் செய்துள்ளார்' எனக் குறிப்பிட்டார்.
2009ஆம் ஆண்டு முதல், இலங்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பணிகளில் உரையாடல் பங்காளியாக ஈடுபட்டு வருவதாகவும், யுரேசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அதன் நிலையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்குப் பங்களிப்பதாகவும் ஜனாதிபதி புடின் குறிப்பிட்டார்.
தூதுவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவர்களின் பங்கேற்புடன் அந்த உறவுகள் புதிய உள்ளடக்கம், பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்கள், பயனுள்ள முயற்சிகள் ஆகியவற்றால் நிரப்பப்படும் அதே வேளை, பொதுவாக, இத்தகைய உறவுகள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் நலன்களுக்காக, நாடுகளின் மக்களின் நலனுக்காக மாறும் வகையில் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கிரெம்ளினில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவைத் தொடர்ந்து, தூதரக ஊழியர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே, தூதரக ஊழியர்களை தனது இல்லத்தில் வரவேற்றார்.
இலங்கைத் தூதரகம்,
மொஸ்கோ
2021 டிசம்பர் 07