இலங்கைத் தூதுவர்கள் மன்றத்தினால் தொகுக்கப்பட்ட 'ஜெனீவா நெருக்கடி - முன்னோக்கிச் செல்லும் வழி' என்ற புத்தகம் இன்று (மார்ச் 12, 2021) வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் புத்தகத்தில் ஜெனீவா நெருக்கடி தொடர்பான இருபத்தி எட்டு (28) கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய வெளிநாட்டு அமைச்சர், வெளியுறவுச் செயலாளர் உட்பட பல முக்கிய நபர்களால் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள், நிபுணர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் பலர் இந்தப் புத்தகத்திற்காகப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
இந்த வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் தூதுவருமான சரத் விஜேசிங்க, இதன் எழுத்தாளர்கள் நல்கிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார். எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்திற்கு பிரதிபலிப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக அன்றி, ஜெனீவா நெருக்கடியின் முழுமையான எதிர்காலத்தையும் மையமாகக் கொண்ட ஒரு தீர்வாக இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் குணவர்தனவும் இந்த நிகழ்வில் உரையாற்றியதுடன், ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். சில நாடுகளை இலக்கு வைப்பதானது உலகின் முன்னுரிமையாக தற்போது இருக்கக்கூடாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வெளியுறவுச் செயலாளர் கொலம்பகேயும் உரையாற்றியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பாக இலங்கையின் முன்னோக்கிச் செல்லும் வழியை வெளிப்படுத்தினார். ஜெனீவாவின் தற்போதைய நிலைமை குறித்த பின்னணியை வழங்கிய அவர், இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்து, உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசு சாரா நபர்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் தன்னார்வப் பங்களிப்பைப் பாராட்டினார்.
இந்தப் புத்தகம் விரைவில் இலங்கைத் தூதரகங்கள் மற்றும் ஏனைய ஆர்வமுள்ள தரப்பினரிடையே பகிரப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 மார்ச் 12