'சிலோன் சுவையூட்டிகள் கொண்டாட்டம்': அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில்  சிலோன் சுவையூட்டிப் பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வு.

‘சிலோன் சுவையூட்டிகள் கொண்டாட்டம்’: அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில்  சிலோன் சுவையூட்டிப் பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வு.

இலங்கையை ஒரு முக்கிய சுவையூட்டி ஏற்றுமதி நாடாக ஊக்குவிப்பதற்காக, அமெரிக்க சுவையூட்டி வர்த்தக சங்கத்துடன் இணைந்து அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம், 2022 செப்டெம்பர் 13ஆம் திகதி வொஷிங்டன் டி.சி.யில் உள்ள தூதரக வளாகத்தில் மாலை  வரவேற்பு நிகழ்ச்சியொன்றை நடாத்தியது.

அமெரிக்க சுவையூட்டி வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள், வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை, திறைசேரித் திணைக்களம், வர்த்தகத் திணைக்களம் போன்ற அமெரிக்காவின் முக்கிய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், சர்வதேச நாணய சபை, உலக வங்கிக்  குழு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான  ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பு (யுஎஸ்எயிட்) ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தனது உரையின் போது, பிரத்தியேகமான இலங்கை சுவையூட்டிப் பொருட்களின் ஏற்றுமதியை  அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய தூதுவர் மகிந்த சமரசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்புக்காக அதிகரித்த வர்த்தகத்தை ஊக்குவித்தார். இலங்கையில் இருந்து சுவையூட்டி தொடர்பான ஏற்றுமதியில் அதிக பெறுமதி சேர்க்கப்பட்ட வடிவங்களை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இலங்கைக்கு தேவை ஏற்பட்ட நேரத்தில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய உதவிகளையும் அவர் பாராட்டினார்.

அமெரிக்க சுவையூட்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் பொன்டஸ் மாட்சன் தனது உரையில், அமெரிக்க சுவையூட்டி வர்த்தக சங்கத்தின் அங்கத்தவர்கள் இலங்கையில் அதிக வர்த்தக வாய்ப்புக்களை மேம்படுத்த முயற்சிப்பதாகவும், இரு நாடுகளின் சுவையூட்டித் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கு இடையே படிப்படியாக அதிக வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவதையும் வலியுறுத்திய அதே வேளையில், இத்தகைய வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக தூதுவர்  மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கை சுவையூட்டிப் பொருட்களின் பண்டைய தோற்றம் மற்றும் அவற்றின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம், குறிப்பாக கறுவா மற்றும் ஏனைய முக்கிய சுவையூட்டிப்  பொருட்கள் பற்றிய விளக்கமான காணொளி இந்த நிகழ்வின் போது இலங்கையை தரமான சுவையூட்டிப் பொருட்களுக்கு மிகவும் விரும்பப்படும் நாடாக விளம்பரப்படுத்தியது.

'அசங்க டொமாஸ்க் மற்றும் செரண்டிப் நடனக் குழுவின்' அமெரிக்க மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலாச்சார நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குளு நடுமா, செல்லம் பிட்டானியா, பெரஹெரா மற்றும் சுரம்ப வல்லிய உள்ளிட்ட இலங்கையின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறப் பாரம்பரியத்தை சித்தரிக்கும் பல்வேறு வகையான நடனங்களை அவர்கள் நிகழ்த்தினர். 'தி நட்ராஜ் ஸ்கூல் ஒஃப் இந்தியன் டான்ஸ்' மேதினியின் நடன நிகழ்ச்சியான சந்திரசூடா, நாட்டின் பல கலாச்சாரத் தன்மையை வெளிப்படுத்தியது. சிங்களப் பாடல்களின் நேரடி ஒலிபரப்பானது,  நிகழ்வு முழுவதும் விருந்தினர்களை மகிழ்வித்தது.

பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய கடற்கரைகள், பசுமையான மலைப் பள்ளத்தாக்குகள் மற்றும் சாகசம் மற்றும் ஆரோக்கியம் முதல் வனவிலங்குகள் வரையிலான பல்வேறு சுற்றுலா இடங்களை ஊக்குவித்த சுற்றுலா வீடியோ காட்சிகளை திரையிடுவதன் மூலம், இலங்கையில்  சுற்றுலாவை ஊக்குவிக்க தூதரகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியது.

மேலும், இலங்கை சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட சிலோன் சுவையூட்டிப் பொருட்களின்  சுவைகளை அனுபவிக்கும் ஆடம்பரமான இலங்கை இரவு உணவு பஃபேயை கலந்து கொண்டவர்கள் அனுபவிக்க முடிந்தது. அழைக்கப்பட்டவர்களை மகிழ்விப்பதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட அப்பங்கள் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றை வழங்கும் இரண்டு நேரடி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு தேநீர் மூலையில் தூய சிலோன் பிளாக் டீக்கு மேலதிக சுவையான தேநீர் வழங்கப்பட்டது. பல்வேறு சுவையூட்டிப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தனது நன்றியுரையில், அமைச்சர் (வணிகம்), சரித யத்தோகொட, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி நிகழ்வை நடாத்த தூதரகத்துடன் ஒத்துழைத்தமைக்காக அமெரிக்க சுவையூட்டி வர்த்தக சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார சவால்கள், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கான இலங்கையின்  ஏற்றுமதிக்கு தடையாக இல்லை என வலியுறுத்திய அவர், சுவையூட்டி ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை சுவையூட்டி சபையின் அனுசரணையுடன் நினைவுப் பொதி மற்றும் சுற்றுலாக் கையேடுகள் மற்றும் சிலோன் டீ ஆகியன பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் பரிசாக வழங்கப்பட்டன.

உலகளாவிய சந்தையில் அமெரிக்க சுவையூட்டித் தொழிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க சுவையூட்டி வர்த்தக சங்கம், தொழில்துறையின் மீதான பொதுக் கருத்தையும் தேவையையும் வடிவமைத்து அதன் உறுப்பினர்களின் வணிக நலன்களை மேம்படுத்துகின்றது. இலங்கையின் ஏற்றுமதியாளர்களுடனான நீண்டகால வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்  அமெரிக்க சுவையூட்டி வர்த்தக சங்கம் இந்த நிகழ்விற்கு நிதியுதவி வழங்கியது.

இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டிசி.

2022 செப்டம்பர் 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close