விரைவான பரிசோதனைகளுக்கான பி.சீ.ஆர். கண்டறிதல் கருவிகள் மற்றும் 05 பி.சீ.ஆர். இயந்திரங்கள் உள்ளடங்கலான 450,000 அமெரிக்க டொலர் பெறுமதியிலான உபகரணத் தொகுதியை, கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பினூடாக கொரியக் குடியரசின் அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தப் பங்களிப்பானது கொவிட்-19 தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கும் மேலதிகமாக வழங்கப்பட்ட நன்கொடையாகும்.
கொரியக் குடியரசின் நன்கொடையானது கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் வைத்து கையளிக்கப்பட்டது. கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் நன்கொடைகளைக் கையளித்தார். பின்னர், உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
இலங்கையும் கொரியக் குடியரசும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புடனான நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டதிலிருந்து, கொரியக் குடியரசு இலங்கைக்கு பெறுமதி வாய்ந்த பல கோவிட்-19 தொடர்பான உதவிகளை வழங்கியுள்ளது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 அக்டோபர் 06