புதுடில்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தலைமையிலான உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவொன்று அமுல் என பிரபலமாக அறியப்படும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் சம்மேளனத்துடன் கடந்த வாரம் கலந்துரையாடல்களை நடாத்திய போது, இந்தியாவின் ஒத்துழைப்புடன் தனது பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் இலங்கை நாடியது.
அமுலின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி. ஆர்.எஸ். சோதி இந்தியாவில் பதவியேற்ற பின்னர், குஜராத் மாநிலத்திற்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் மொரகொட, 22ஆந் திகதி ஆனந்த் நகரில் உள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் கலந்துரையாடினார்.
மாநில அதிகாரிகள் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக உயர்ஸ்தானிகர் மொரகொட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருந்தார்.
அமுல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தலைமையிலான குழுவுடனான கலந்துரையாடலின் போது, அமுல் பால் பொருட்களை தற்போதுள்ள இந்திய கடன் வரி மூலம் இறக்குமதி செய்வதிலும், பாலில் தன்னிறைவை உறுதி செய்யும் நோக்கில் இலங்கையில் அமுல் கூட்டுறவு மாதிரியை பிரதியெடுப்பதிலும் விஷேட கவனம் செலுத்தி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பால்வளத்துறை ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அமுல் நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியுடன் எருமை வளர்ப்பை பால் ஆதாரமாக இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்தியாவில், நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் எருமைப் பால் 45மூ% ஆகும் அதே சமயம் அமுலின் மொத்த பால் உற்பத்தியில் 55% எருமைகளிலிருந்தே வருகின்றது.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, பால் பொதியிடல் மற்றும் ஏனைய பால் உணவுகளின் உற்பத்தி நடைபெறுகின்ற ஆனந்தில் உள்ள கைரா மில்க் யூனியன் பால் ஆலைக்கு உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுக்குழுவினர் விஜயம் செய்தனர்.
சிறு நகரங்களில் வணிகர்கள் மற்றும் முகவர்களால் விளிம்பு நிலை பால் உற்பத்தியாளர்களை சுரண்டுவதற்கு பதில் கூட்டுறவு சங்கமாக 1946 இல் உருவாக்கப்பட்ட அமுல், காலனித்துவ எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் இந்தியாவின் சுதந்திர இயக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. இன்று, அமுல் குஜராத்தில் 18,565 கிராமங்களில் 3.6 மில்லியன் பால் உற்பத்தியாளர்களால் கூட்டாகக் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த கிராம கூட்டுறவுகள் பதின்மூன்று பால் சங்கங்களை உருவாக்குவதுடன், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் அந்த பால் சங்கங்களின் உச்ச அமைப்பாக செயற்படுகின்ற அதே வேளை, கூட்டுறவு நிர்வாகத்தையும் நிர்வகிக்கின்றது. கூட்டமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தும் அமைப்பாகும்.
அமுல் இந்தியாவின் 'வெள்ளைப் புரட்சியை' அல்லது பாலில் தன்னிறைவை அடைந்து கொள்வதற்காக, பால் பற்றாக்குறை உள்ள நாடாக இருந்து இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றியதுடன், 1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விஞ்சியது. இது இந்தியா முழுவதும் அமுல் மாதிரியைப் பிரதிபலிப்பதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலின் கீழ், திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேல் இந்த அமைப்பின் நிறுவனத் தலைவராகி, 70 களில் ஓய்வு பெறும் வரை அதை வழிநடத்தினார். அமுலின் மகத்தான வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் எனக் கருதப்படும் கலாநிதி. வர்கீஸ் குரியன், 1949 இல் அதன் பொது முகாமையாளராக நிறுவனத்தில் இணைந்து, பின்னர் 1973 இல் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகி, 2006 வரை அப்பதவியை வகித்தார்.
அமுல் தலைமையகத்திற்கான தனது விஜயத்தின் போது, உயர்ஸ்தானிகர் மொரகொட, சர்தார் வல்லபாய் படேல், திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேல் மற்றும் கலாநிதி. வர்கீஸ் குரியன் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுடில்லி
2022 ஜூலை 26