கலாநிதி பாலித டி.பி. கொஹொன தனது நற்சான்றிதழின் பிரதியை சீனாவின் வெளியுறவு அமைச்சின் உபசரணைத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிப்பு

கலாநிதி பாலித டி.பி. கொஹொன தனது நற்சான்றிதழின் பிரதியை சீனாவின் வெளியுறவு அமைச்சின் உபசரணைத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிப்பு

சீன மக்கள் குடியரசின் இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித டி.பி. கொஹொன தனது நற்சான்றிதழின் பிரதியை நெறிமுறைகளுக்கு இணங்க முறையாக, சீனாவின் வெளியுறவு அமைச்சின் உபசரணைத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமான திரு. ஹொங் லீயிடம் இன்று கையளித்தார்.

தூதுவரை அன்புடன் வரவேற்ற திரு. ஹொங், புகழ்பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த இராஜதந்திரியான இலங்கைத் தூதுவரை வரவேற்பதில் சீனா மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். தனது ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வளர்ச்சியடையும் என சீனா எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோவிட்-19 மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சீனாவில் தான் பணியாற்றும் காலத்திலான தனது முன்னுரிமைகள் குறித்து கலாநிதி கொஹொன திரு. ஹொங்கிடம் விளக்கினார். சீனாவின் தடுப்பூசிகளை அணுகிக் கொள்வதற்காக கோரிக்கை விடுத்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய கடிதத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடல்சார் பட்டுப்பாதை சகாப்தத்தின் போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான, நீண்டகால மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த கலாநிதி கொஹொன, எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைக்காக சீனாவும் இலங்கையும் ஒத்துழைக்கும் என எதிர்பார்ப்பதாக கலாநிதி கொஹொன குறிப்பிட்டார். மேலும், தனது ஆட்சிக் காலத்தில் அதிகமான முதலீடுகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்காக ஊக்குவிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு சி ஜின்பிங் அவர்களுக்கான அதிமேதகு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் விஷேட பரிசொன்றையும் தனிப்பட்ட செய்தியையும் எடுத்து வந்துள்ளதாக கலாநிதி கொஹொன தெரிவித்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை தான் அறிந்துள்ளதாக திரு. ஹொங் பதிலளித்தார். கடந்த காலங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவளித்திருப்பதாகவும், எதிர்காலத்திலும் சீனாவை ஒரு நட்பு நாடாகவே கருதலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்காக இலங்கை தொடர்ந்தும் திறந்துள்ளமையினால், சீன நிறுவனங்கள் இலங்கையுடன் இணைந்து ஈடுபடுவதற்காக ஊக்குவிக்கப்படும் என்றும், தடுப்பூசி விநியோகம் குறித்து சீனா அரசாங்கம் விரைவில் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிபிட்டார்.

 

இலங்கைத் தூதரகம்
பெய்ஜிங்

2021 ஜனவரி 12

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close