ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகப் பொறுப்பாளர் 2021 நவம்பர் 26ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்தார்.
தனது தொடக்க உரையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா ஹூன் சயீத் அல் நாதனின் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதரகப் பொறுப்பாளர், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேலும், நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரில், கைத்தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி சுல்தான் அல் ஜாபர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தூதரகப் பொறுப்பாளரின் கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை அரசாங்கமும் ஐக்கிய அரபு இராச்சியமும் நல்லுறவுகளைக் கொண்டுள்ளதாகவும், தனது பதவிக்காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான இலங்கையின் உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். பிராந்திய மற்றும் பல்தரப்பு மன்றங்களில் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு நல்கிய ஆதரவையும் அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.
பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தின் போது இலங்கை துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ், சங்கத்தின் முன்னேற்றத்திற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னாள் துணைத் தலைவராக ஆற்றிய பங்கைப் பாராட்டினார்.
2021 டிசம்பரில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 'சூழலியல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ளும் போது, இந்த விடயங்கள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 நவம்பர் 28