பெப்ரவரி 2022 இல் இலங்கை கறுவாவிற்கு, இலங்கை கறுவாத் தூள், இலங்கை கறுவா இலை எண்ணெய் மற்றும் இலங்கை கறுவாப் பட்டை எண்ணெய் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட புவியியல் அடையாள அந்தஸ்தை கொண்டாடுவதற்கும், பெல்ஜியத்தில் உள்ள இலங்கை கறுவா, தெர்மோன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் பெல்ஜியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 அக்டோபர் 18ஆந் திகதி நிகழ்வொன்றை நடாத்தியது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பொதுப் பணிப்பாளர்கள், ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவை மற்றும் பெல்ஜிய அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பெல்ஜியத்தில் கறுவாவை இறக்குமதி செய்யும் அல்லது பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஐரோப்பிய ஆணைக்குழுவின் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான பொதுப் பணியகத்தின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஜோன் கிளார்க் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். உலக கறுவா சந்தையில் உயர் தரத்தின் உண்மையான கறுவாவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட புவியியல் குறியீட்டுடன் கூடிய இலங்கை கறுவா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந் நிகழ்வின் நோக்கமாகும். ஐரோப்பிய பிராந்தியம் பெரும்பாலும் இலவங்கப்பட்டை காசியாவைப் பயன்படுத்துவதுடன், இது இலங்கை கறுவாவிற்கான மலிவான மாற்றாகும்.
இலங்கை கறுவாவிற்கான பாதுகாக்கப்பட்ட புவியியல் அடையாள அந்தஸ்த்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்தில் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு வழங்கும் நன்மைகள் குறித்த அறிமுகத்தை தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் வழங்கினார். இலங்கை கறுவா இலங்கையின் பாரம்பரியம் மற்றும் பெருமை எனக் குறிப்பிட்ட தூதுவர், இலங்கை கறுவாவை ஊக்குவிக்கும் அதே வேளையில், இலங்கை கறுவாவின் எழுச்சியூட்டும் கதையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார். மேலும், உலகச் சந்தையில் 80% ஐ வைத்திருக்கும் இலங்கை கறுவாவின் உண்மையான தாயகமாக இருப்பதால், பாதுகாக்கப்பட்ட புவியியல் குறியீட்டு நிலையைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேசத்தின் முக்கிய சந்தைப் பிரிவுகளுக்குள் இலங்கை ஊடுருவ முடியும் என தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை கறுவா மற்றும் கறுவா காசியாவிற்கும் இடையிலான வேறுபாடுகளை விரிவாக விளக்கியமை தூதுவரின் விளக்கக்காட்சியின் சிறப்பம்சமாக அமைந்திருந்ததுடன், இலங்கை கறுவாவின் உயர் தரம், தனித்துவமான உற்பத்தி செயன்முறை, தனித்துவமான சுவை மற்றும் நறுமணம், கறுவாப்பட்டையின் மெல்லிய தடிமன், மென்மையான சுவை மற்றும் பல பண்புகளை வலியுறுத்தியது. ஆரோக்கிய நன்மைகள், மற்றும் மிகக் குறைந்த அளவிலான கூமரின் முக்கிய பண்பு ஆகியவற்றின் காரணமாக இது நுகர்வோருக்கு ஆரோக்கியமான தெரிவாக அமைகின்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பணிப்பாளர் ஜோன் கிளார்க் இலங்கைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்திற்கு இலங்கை கறுவா ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு பாதுகாக்கப்பட்ட புவியியல் அடையாள அந்தஸ்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாராட்டினார்.
வணிக ஊக்குவிப்பு நிகழ்வின் போது, பதின்மூன்று (13) இலங்கை நிறுவனங்களின் சுயவிவரங்கள் பகிரப்பட்டதுடன், அவற்றின் தயாரிப்பு மாதிரிகள் பெல்ஜியத்தில் உள்ள சாத்தியமான இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதற்காக காட்சிப்படுத்தப்பட்டன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் சிலோன் வர்த்தக சம்மேளனத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் வெர்ஜர் நேச்சுரல்ஸ் (பிரைவேட்) லிமிடெட், எல்பிட்டிய பிளான்டேஷன்ஸ் பிஎல்சி, லக் சினமன் பிளாண்டர்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ் குரூப் (பிரைவேட்) லிமிடெட், ஏ. பார் அண்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட், சமகி ஆர்கானிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், டயமண்ட் இன்டர்நேஷனல் லங்கா (பிரைவேட்) லிமிடெட், சஞ்சீவக ஆயுர்வேதிக் ப்ரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், எச்டிடீஎஸ் எக்ஸ்ட்ரோக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், நியூ லங்கா சினமன் (பிரைவேட்) லிமிடெட், சில்வர்மில், செயிலா ஆர்கானிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், சினமன் வன் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஃபுட் எக்ஸ்போர்ட் டீ (பிரைவேட்) லிமிடெட் போன்ற சம்பந்தப்பட்ட இலங்கை நிறுவனங்கள் பங்கேற்றன.
இலங்கை உலக சந்தைக்கு சுமார் 18,000 மெட்ரிக் தொன் இலங்கை கறுவாவை ஏற்றுமதி செய்வதுடன், இதில் 45% தென் அமெரிக்க நாடுகளாலும் 14% அமெரிக்காவாலும் இறக்குமதி செய்யப்படுகின்றது. கறுவா காசியாவைப் பயன்படுத்துவதற்குப் பழகியிருப்பதால், ஐரோப்பிய பிராந்தியமானது இலங்கை கறுவாவில் 10% மட்டுமே இறக்குமதி செய்கின்றது. இலங்கை கறுவாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாக்கப்பட்ட புவியியல் குறியீடானது, ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் சிலோன் கறுவாவை அதன் தரம் குறைந்தவற்றிலிருந்து வேறுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க கருவியாகும். இது போட்டி நன்மைக்கான ஆதாரமாக செயற்பட்டு, சந்தை வேறுபாடு மற்றும் தயாரிப்பு வருமனத்தை அதிகரிக்க உதவும் அதே வேளை, நுகர்வோரிடமிருந்து பிரீமியம் விலையை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கும். அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாக்கப்பட்ட புவியியல் குறியீட்டினூடாக தரச் சான்றளிக்கப்பட்ட இலங்கை கறுவாவை மேம்படுத்துவதற்கு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் தீவிரமான செயற்றிட்டம் அவசியமானதாகும்.
இலங்கைத் தூதரகம்,
பிரஸ்ஸல்ஸ்
2022 அக்டோபர் 21