இலங்கையும் அல்ஜீரியாவும் தமது முதலாவது இருதரப்பு ஆலோசனைகளின்போது அரசியல், பொருளாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

இலங்கையும் அல்ஜீரியாவும் தமது முதலாவது இருதரப்பு ஆலோசனைகளின்போது அரசியல், பொருளாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

அல்ஜீரிய மக்கள் ஜனநாயக குடியரசுடனான முதன்முதலான இருதரப்பு மெய்நிகர் ஆலோசனைகளை இலங்கை 12 அக்டோபர் 2021 அன்று நடாத்தியது. இக்கலந்துரையாடல்களின்போது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தல் குறித்து கவனஞ்செலுத்தப்பட்டது.

ஆபிரிக்க பிராந்தியத்துடனான உறவுகளை மேலும் விரிவாக்குதல் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கிணங்க, வட ஆபிரிக்காவில் முன்னணி பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அல்ஜீரியாவுடனான நெருங்கிய ஈடுபாடு எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடத்தின் மொத்த வர்த்தகம் 5.39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதாக இருதரப்பினரும் குறித்துக்கொண்டனர். அல்ஜீரியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 0.63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயானாலும், அல்ஜீரியாவிலிருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 4.76 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்தது. பெற்றோலியம் மற்றும் எல்  பி எரிவாயுவின் பிரதான ஏற்றுமதியாளர் என்ற வகையில், இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் பெரும்பாலும் எரிசக்தி துறையுடனேயே இருந்து வந்திருக்கிறது. ஆனபோதிலும், குறிப்பாக தேயிலை, வாசனைப்பொருட்கள், தெங்கு உற்பத்திகள் மற்றும் ஆடைகள் ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறு பற்றி ஆராயப்பட்டது. இரு நாடுகளதும் வர்த்தக சம்மேளனங்களுக்கு இடையிலான ஒரு மெய்நிகர் கூட்டமானது, இச்செயன்முறையை முன்னோக்கிக்கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த இருதரப்பினரும், அடுத்த வருடம் இருநாடுகளுக்கும் இடையிலான 50 வருட இராஜதந்திர உறவுகளை உரிய வகையில் கொண்டாடுவதற்கு உடன்பட்டனர். 2022 இல் அடுத்த அணிசேரா இயக்கத்தின் (NAM) உச்சிமாநாட்டினை தாம் நடாத்தவுள்ளதாக அல்ஜீரியா அறிவித்துள்ளதுடன், இரு நாடுகளுமே அணிசேரா இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களாக இருப்பதும் நினைவுகூரப்பட்டது.  பல்தரப்பு மட்டத்தில் தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்ற  இருநாடுகளும் உடன்பட்டன.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் சுற்றுலா துறைகளில் இருதரப்பு கூட்டுறவு தொடபில் கவனஞ்செலுத்த இரு நாடுகளும் தத்தமது ஆர்வத்தை வெளிப்படுத்தின. பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை முறியடித்தலில் ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக் குழுவிற்கு, ஆபிரிக்கா அலுவல்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரும் பி காண்டீபன் அவர்களும், அல்ஜீரிய குழுவிற்கு, அல்ஜீரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின்  ஆசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பூமிடீன் குன்னாட் அவர்களும் தலைமை வகித்தனர். இந்த மெய்நிகர் கலந்துரையாடல்களின்போது, கெய்ரோவிலுள்ள அல்ஜீரியாவிற்கு சான்றளிக்கப்பட்ட இலங்கைத் தூதுவர், புதுடில்லியிலுள்ள, இலங்கைக்குச் சான்றளிக்கப்பட்ட அல்ஜீரிய தூதுவர் மற்றும் இரு நாடுகளின் வெளிநாட்டமைச்சுக்களைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

14 அக்டோபர் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close