இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், தூதுவர் சமிந்த கொலொன்ன அவர்கள் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான குடிமக்களின் தேசியப் பொறுப்பை எடுத்துரைப்பு

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், தூதுவர் சமிந்த கொலொன்ன அவர்கள் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான குடிமக்களின் தேசியப் பொறுப்பை எடுத்துரைப்பு

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, அவரது கணவர் மற்றும் தூதரகப் பணியாளர்கள் இலங்கையின் 74வது சுதந்திர தின விழாவை 2022 பெப்ரவரி 04ஆந் திகதி பேங்கொக்கில் உள்ள ஃபெயார்வியூ டவரில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பெருமையுடன் கொண்டாடினர்.

தூதுவர் சமிந்த கொலொன்ன தேசியக் கொடியை ஏற்றிவைத்து, தேசிய கீதத்தை இசைத்ததனைத் தொடர்ந்து நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து தேசப்பற்றுள்ள இலங்கைப் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. கொழும்பில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழாவில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையை தூதுவர் சமிந்த கொலொன்ன வாசித்தார். இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரின் சுதந்திர தினச் செய்திகளை முதல் செயலாளரும் சான்சரி தலைவருமான சரித ரணதுங்க வாசித்தார்.

இந்நிகழ்வில் தனது கருத்துக்களை வழங்கிய தூதுவர், அன்புக்குரிய தாய்நாடு 443 வருடங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்ததையும், 1505 முதல் 1948 வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரால் ஆளப்பட்டதையும் மற்றும் 1948 பெப்ரவரி 04ஆந் திகதி எமது சுதந்திரத்தை மீண்டும் வென்றெடுத்த எமது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களால் சுதந்திரத்திற்கான அரசியல் போராட்டம் எவ்வாறு ஒன்றிணைந்து வழிநடத்தப்பட்டது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

தூதுவர் மேலும் தெரிவிக்கையில், 'அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான தலைமைத்துவத்தை வழங்க தயாராக இருப்பதால், இன்றைய கோவிட்-19 தொற்று சவால்களையும் நாம் வெற்றிகொள்ள முடியும். இந்த இக்கட்டான நேரத்தில், இலங்கையின் பொறுப்புள்ள குடிமக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், உற்பத்தி மிக்க குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கமான சமூகம் மற்றும் வளமான தேசத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தேசிய பொறுப்பு உள்ளது' எனத் தெரிவித்தார்.

இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த அவர், பகிரப்பட்ட வரலாறு மற்றும் பொதுவான ஆன்மீக பாரம்பரியத்தின் அடிப்படையில், புத்தபெருமானின் காலத்தால் அழியாத செய்தியால் வழிநடத்தப்பட்டு வளர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, தாய்லாந்து இராச்சியத்தின் அரசர் மஹா வஜிரலோங்கோர்ன் ஃபிரா வஜிரக்லாவ்சாயு{ஹவாவின் ஆசீர்வாதத்துடன், குறிப்பாக வர்த்தகம், பொருளாதாரத் துறைகள் மற்றும் முதலீட்டுத் துறைகளில் அந்த சிறந்த நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் புதிய வழிகள் விரிவடையும் என மேலும் தெரிவித்தார்.

2022 பெப்ரவரி 04ஆந் திகதி இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், தாய்லாந்தின் தேசிய வானொலி, வானொலி தாய்லாந்து வேர்ல்ட் சேர்வீஸ் மற்றும் தாய்லாந்து எலைட்+ சஞ்சிகை ஆகியவை தூதுவரிடமிருந்து விசேட செய்திகளை வெளியிட்டன.

கொண்டாட்டத்தைத் தொடர்ந்து தூதுவர் சமிந்த கொலொன்ன மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் நிஷாந்த சேனாநாயக்க ஆகியோரால் மதிய உணவு வழங்கப்பட்டது. தாய்லாந்தில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நாட்டு முகாமையாளர் தாரக்க கலஹிடியாவ மற்றும் தூதரக ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக், தாய்லாந்து

2022 பிப்ரவரி 14

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close