இந்தோனேசிய நிறுவனத்திற்கு இலங்கை இரத்தின ஏற்றுமதியாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக இந்தோனேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் மெய்நிகர் வணிக சந்திப்பு ஏற்பாடு

இந்தோனேசிய நிறுவனத்திற்கு இலங்கை இரத்தின ஏற்றுமதியாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக இந்தோனேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் மெய்நிகர் வணிக சந்திப்பு ஏற்பாடு

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 டிசம்பர் 17ஆந் திகதி இந்தோனேசியாவில் உள்ள துலோலா டிசைன்ஸ் ஆடம்பர நகை வர்த்தக நாமத்திற்கு இலங்கையின் நான்கு இரத்தின ஏற்றுமதி நிறுவனங்களை அறிமுகப்படுத்துவதற்கான மெய்நிகர் வணிக சந்திப்பை ஏற்பாடு செய்தது.

இந்தோனேசிய வரலாற்றிலிருந்து உருவங்கள் மற்றும் வடிவமைப்புக்களை எடுத்து அவற்றால் ஈர்க்கப்பட்ட நவீன நகை சேகரிப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் வடிவமைப்பாளர் ஸ்ரீ லூஸ்-ருஸ்னாவால் துலோலா டிசைன்ஸ் 2007 இல் தொடங்கப்பட்டது. துலோலா டிசைன்ஸ் இலங்கையின் நீல மாணிக்கங்கள், இளஞ்சிவப்பு மாணிக்கங்கள் மற்றும் சிவப்பு மாணிக்கங்களை தமது புதிய சேகரிப்புக்காக கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியது.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கைத்தொழில் உற்பத்திப் பிரிவின் ஏற்றுமதி ஊக்குவிப்பு அதிகாரி டில்ஷா டி சில்வா இலங்கையின் இரத்தின மற்றும் ஆபரணத் தொழில் தொடர்பான விளக்கக்காட்சியை நடாத்தினார். இந்த வர்த்தக சந்திப்பில் பங்குபற்றியவர்களில் இந்தோனேசியாவின் துலோலா டிசைன்ஸ் கொள்வனவுக் குழு மற்றும் இலங்கையின் முன்னணி இரத்தின ஏற்றுமதி நிறுவனங்களான ஜெம் பரடைஸ், புன்சிரி ஜெம்ஸ், பிரியந்த ஜெம்ஸ் மற்றும் ஸம் ஜெம்ஸ் ஆகியன உள்ளடங்கும்.

2021 இல் இலங்கை இந்தோனேசியாவிற்கு 0.12 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக் கற்களை ஏற்றுமதி செய்தது. இலங்கையின் இரத்தின ஏற்றுமதியாளர்களை துலோலா டிசைன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைப்பதில் தூதரகம் மகிழ்ச்சியடைவதாகவும், விலைமதிப்பற்ற கற்களுக்கான சிறந்த இடமாக இலங்கையை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாகவும் இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகர தெரிவித்தார். இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் (வர்த்தகம்) ஹெஷானி பிரேமதிலக்க, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடனான இந்த சந்திப்பை ஒருங்கிணைத்தார்.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2021 டிசம்பர் 24

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close