இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் ரீட்டா மனெல்லா, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 22, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
அரசியல் உறவுகள், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உறவுகளை மேலும் ஒருங்கிணைத்தல், இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு மற்றும் விஜயங்களின் பரிமாற்றம் உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் கட்டிடக்கலை, ஆடை வடிவமைப்பு மற்றும் இத்தாலிய உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இத்தாலியத் தூதுவர் குறிப்பிட்டார்.
செப்டெம்பர் மாதம் போலோக்னாவில் நடைபெற்ற ஜீ 20 சர்வமத மன்றம் 2021 இல் விஷேட விருந்தினராகக் கலந்துகொள்வதற்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலிக்கான வெற்றிகரமான விஜயத்தை எளிதாக்குவதற்கு உதவியமைக்காக இத்தாலியத் தூதுவருக்கு வெளிநாட்டு அமைச்சர் தனது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இத்தாலியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் பிரான்செஸ்கோ பெரலே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 நவம்பர் 23