இலங்கைக்கு விஜயமளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நிகழ்த்தினார்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று (04) பிற்பகல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார். அத்தினம் காலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரை வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன வரவேற்றார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க செப்டம்பர் 22 ஆம் திகதி பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதல் உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் கலாநிதி ஜெய்சங்கர் ஆவார். புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதும் வலுவான இருதரப்பு கூட்டாண்மையுடன் முன்னேறுவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ள இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு, சமூகப் பாதுகாப்பு, கலாச்சாரம், பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல விடயங்கள் மற்றும் கடல்வளம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு ஒத்துழைப்பையும், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தியாவின் ஆதரவையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமாய்ச்சராகப் பதவியேற்றதற்கு அமைச்சர் விஜித ஹேரத்திற்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, தனது நெருங்கிய அண்டை நாடான இலங்கையின், பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவைத் தெரிவித்தார். இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கைக்கான மையத்தில் இலங்கை உள்ளது எனத்தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹெரத் மற்றும் புதிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்ததுடன், வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் விருந்தினர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது பிரதியமைச்சருக்கும் தூதுக்குழுவினருக்கும் மதிய உணவு விருந்தொன்றை வழங்கினார்.
கொழும்புக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் ஜெய்சங்கர், பரஸ்பர வசதியான திகதியொன்றில் இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில், ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரும் இணைந்திருந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
கொழும்பு
2024 அக்டோபர் 04