கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் 2021 ஜூலை 13ஆந் திகதி பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் குறித்து மீண்டும் வலியுறுத்துகையில், பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் வர்த்தக உறவுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவதாக இராஜாங்க அமைச்சர் பாலசூரிய குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மத உறவுகளை கருத்தில் கொண்டு, விகாரைகளுக்கிடையிலான தொடர்புகளின் ஒத்துழைப்பை புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, இரு நாடுகளுக்கும் இடையிலான மத மற்றும் கலாச்சார நலன்களைப் பகிர்ந்து கொள்வதற்காக வியட்நாமின் பௌத்த விகாரைகளுடன் இணைந்து கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பில், வியட்நாமில் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்காக வியட்நாம் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கிய தூதுவர் ட்ரூக், அந்த அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது முழுமையான செயலாக்கத்தில் உள்ளது.
மேலும், இலங்கை மற்றும் வியட்நாமின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை இராஜாங்க அமைச்சர் பாலசூரிய ஆராய்ந்ததுடன், வியட்நாம் முதலீட்டாளர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் போன்ற பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களுக்கு வழிவகுக்கும் வகையில், கொழும்புத் துறைமுக நகரத்தில் தொடர் கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும் ஒப்புக்கொண்டார்.
வியட்நாமில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாட்டை விளக்கிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, வியட்நாமில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக வியட்நாம் மொழியில் இலங்கை சுற்றுலா குறித்த திட்டங்கள் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவதை எளிதாக்கலாம் என எடுத்துரைத்தார். இதன் பிரதிபலிப்பாக, சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வியட்நாம் தூதுவர் ட்ரூக் எடுத்துரைத்தார்.
வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள வியட்நாம் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூலை 13