வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளரின் புதுப்பிக்கப்பட்ட கருத்து

வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளரின் புதுப்பிக்கப்பட்ட கருத்து

வெளிநாட்டு உறவுகள் அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெற்று, வைரஸ் பரவும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் முன்னெடுத்துள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்றைய தினம் (2020 மார்ச் 14) வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்ட கருத்துக்களுக்கு மேலதிகமாக, பின்வருவனவற்றைக் குறிப்பிட அமைச்சு விரும்புகின்றது:

29 பெப்ரவரி முதல் 01 மார்ச் 2020 வரையான காலப்பகுதியில் தனிப்பட்ட காரணத்திற்காக ஐரோப்பாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினருடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சைச் சேர்ந்த குறித்த அதிகாரி தொடர்புகளை கொண்டிருப்பதற்கு முன்னர், அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் போது, வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைத் தூதுக்குழுவின் உறுப்பினர்கள் குறித்த அதிகாரியுடன் மட்டுமே தொடர்பைக் கொண்டிருந்தனர்.

2020 மார்ச் 08 ஆந் திகதி குறித்த அதிகாரி கொழும்புக்குத் திரும்பி வந்ததைத் தொடர்ந்து அமைச்சர் குணவர்தன அந்த அதிகாரியுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை.

குறித்த அதிகாரியின் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் கொழும்புக்கு திரும்புவதற்கு முன்னர், மார்ச் 09ஆந் திகதியுடன் ஆரம்பித்த வாரத்தில் ஒரு வேலை நாளில் மட்டுமே குறித்த அதிகாரி அமைச்சிற்கு வருகை தந்திருந்ததுடன், குறித்த அதிகாரி வருகை தந்ததிலிருந்து சில தினங்களுக்குப் பின்னரே அந்த பாதிக்கப்பட்ட நபர் நாடு திரும்பியிருந்தார்.

ஆயினும்கூட, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த வாரத்தின் குறித்த அந்த ஒரு வேலை நாளில் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் தொடர்பு கொண்டிருந்த அனைத்து ஊழியர்களும், மற்றும் குறித்த அதிகாரியும், அவரது குடும்ப உறுப்பினரும் வதியும் அமைச்சின் விடுதியிலுள்ள ஊழியர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மற்றும் முந்தைய 2 வாரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரி பணிபுரிந்த ஜெனீவாவிலுள்ள நிரந்தரத் தூதரகத்தின் ஊழியர்களும் 'சுய தனிமைப்படுத்தலை' மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சினதும், விடுதியினதும் சம்பந்தப்பட்ட பகுதிகளை கிருமி நீக்கம் செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது அமைச்சின் குறித்த அதிகாரி ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கின்றார்.

தனது ஊழியர்கள் மற்றும் வருகை தருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கான நிலைமைகளை அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து, மதிப்பீடு செய்யும்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
15 மார்ச் 2020
Please follow and like us:

Close