UNODC இன் செயற்பாட்டுப் பணிப்பாளர் மிவா கடோ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்த்தனவை சந்தித்தார்

UNODC இன் செயற்பாட்டுப் பணிப்பாளர் மிவா கடோ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்த்தனவை சந்தித்தார்

Image1

 

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் பணிப்பாளர் மிவா கடோ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களை 2019 நவம்பர் 28 ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இலங்கை மற்றும் UNODC இடையே குறிப்பாக கடல்சார் குற்றத் தடுப்பு தொடர்பில் அதிகரித்து வரும் ஈடுபாட்டை அமைச்சர் பாராட்டினார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டை அழிவுக்குட்படுத்திய 30 ஆண்டுகால பிரிவினைவாத பயங்கரவாத மோதலுக்குப் பின்னர் இலங்கை வளர்ச்சியடைந்து வரும் ஒரு தருணத்தில், வன்முறைத் தீவிரவாதம் மற்றும் ஏனைய சட்டவிரோதக் குற்றங்கள் இலங்கையின் பொருளாதாரப் பாதையை தடை செய்கின்றன என அவர் வலியுறுத்தினார். இத்தகையதொரு சூழ்நிலையில், நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிவதற்காக இலங்கை UNODC உடன் ஈடுபடுவதற்கு எதிர்பார்க்கின்றது.

இலங்கையின் நீர்ப்பரப்பு மற்றும் அதற்கு அப்பால் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இலங்கை மற்றும் UNODC க்கு இடையிலான ஒத்துழைப்பு எவ்வாறு போதைப்பொருள் கடத்தலின் பல முயற்சிகளைத் தடுத்தது என்பன தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பதிலான இலங்கையின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை UNODC பாராட்டியது. மேலும், பொருத்தமற்ற சூழ்நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, சிறை ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துதல் உள்ளடங்கலாக, போதைப்பொருள் கடத்தலை விரிவுபடுத்துவதற்கு பங்களிப்புச் செய்யும் சிறைச்சாலைகளுக்குள் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடைமுறை வழிமுறையைக் கண்டறிவதற்கான தமது ஈடுபாட்டை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.

குறிப்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட சிறந்த ஒத்துழைப்பை UNODC பாராட்டியதுடன், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு வழங்கப்படும் விஜயம் செய்தல், தரித்தல், தேடுதல் மற்றும் பறிமுதல் ஆகியவற்றிலான பயிற்சியை இலங்கை கடற்படையினருக்கு அளிப்பதற்காக UNODC வழங்கிய ஆதரவு குறித்தும் சுருக்கமாக விளக்கப்பட்டது.

நாட்டிற்கு உறுதியான நன்மைகளை வழங்கும் அதிநவீன உபகரணங்களின் ஆதரவுடன் பொருத்தமான தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்து, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் உள்நாட்டுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு இலங்கைக்கு விரிவான நீண்ட கால ஆதரவு அவசியமாகும் என வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் தலைமையிலான கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (IORA) செயற்குழுவின் மூலமாக, குறிப்பாக இந்து சமுத்திர கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்புக்கான களத்திலான இலங்கையின் தற்போதைய வலிமையை UNODC யின் ஆதரவு அதிகரிக்கச் செய்துள்ளது என செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியால் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ள வகையில், நடுநிலையை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை, அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படுதல் மற்றும் இலங்கை ஒரு வலுவான கடல் கொள்கையைத் தொடருவதற்கு தயாராக உள்ளமை போன்றன தொடர்பில் அமைச்சர் கவனத்தை ஈர்த்தார்.

2018 அக்டோபரில் நடைபெற்ற 'இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல்' தொடர்பான தடம் 1.5 மாநாடு மற்றும் 2019 ஆகஸ்டில் நடைபெற்ற கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான IORA செயற்குழுவின் முதலாவது கூட்டம் ஆகியவற்றுக்கு UNODC அளித்த உதவியை அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி திசாநாயக்க பாராட்டிய அதே வேளை, அண்மையில் நடைபெறவிருக்கும் தடம் 1 மாநாட்டிற்காக உறுதியளிக்கப்பட்டுள்ள ஆதரவையும் வரவேற்றார்.

பணிப்பாளர் கடோவுடன் UNODC கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் எலன் கோல் மற்றும் UNODC இன் இலங்கை அலுவலகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் இணைந்திருந்த அதே வேளை, வெளிவிவகார செயலாளர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
29 நவம்பர் 2019
Image2
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close