சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அரியா ஃபோர்முலா கூட்டம் மோதல் வலயங்களிலிருந்து சிறுவர்களை முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திருப்பி அனுப்புதல். நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தல்

சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அரியா ஃபோர்முலா கூட்டம் மோதல் வலயங்களிலிருந்து சிறுவர்களை முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திருப்பி அனுப்புதல். நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தல்

  ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி

மாண்புமிகு மொஹான் பீரிஸ் அவர்களின் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 2021 ஜனவரி 29

 தலைவர் அவர்களே,

இன்று காலை விளக்கக்காட்சிகளைக் கேட்டதன் பின்னர், உலகளாவிய குடும்பத்தின் உறுப்பினர்களாகிய நாம் உண்மையிலேயே “meā culpā, meā culpā, meā máxima culpā” - “எனது தவறின் மூலம், எனது தவறின் மூலம், எனது மிகவும் மோசமான தவறின் மூலம்” என்று சொல்ல வேண்டுமா என யோசித்துக்கொண்டிருந்தேன். இது ஒரு சோகமான கதை அல்லவா? பின்வரும் விவிலியத் திருப்பாடல் 127 - வசனங்கள் 3 - 5 எனது நினைவுக்கு வந்தது:

இதோ, சிறுவர்கள் எங்கள் படைப்பாளரின் பரிசு.

கருப்பையின் பழம் ஒரு வெகுமதி.

போர்வீரனின் கைகளில் அம்புகள் போல.

ஒருவரின் இளமையின் போதான குழந்தைகளும் அப்படித்தான்.

அவர்களை நிறைவாகக் கைக்கொண்டுள்ள மனிதன் எவ்வளவு பாக்கியவான்.

வாசலில் தங்கள் எதிரிகளுடன் பேசும்போது அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்.

தலைவர் அவர்களே,

முரண்பாடு என்னவென்றால், குறிப்பாக ஆயுத மோதலின் பின்னணியில், உலகம் சிறுவர்கள் மீது குறிப்பாக அதிகமான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை. மோதல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 415 மில்லியன் சிறுவர்கள் வாழ்கின்றனர் என்பது பதிவுசெய்யப்பட்ட விடயம். அதிகமான தீவிரம் கொண்ட மோதல் பகுதிகளில் இந்த எண்ணிக்கை 149 மில்லியனாக உள்ளதுடன், இது அமெரிக்காவில் உள்ள சிறுவர்ளின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும்.

தலைவர் அவர்களே,

உண்மையில் ஒரு சோகமான தலைப்பான மிகவும் முக்கியமான இந்தத் தலைப்பில், இந்த விவாதத்தை ஏற்பாடு செய்ததமைக்காக ரஷ்யா மற்றும் கஸகஸ்தானின் நிரந்தரத் தூதரகங்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பொதுச்செயலாளரின் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். தமது ஆத்மார்த்தமான தேடல் மற்றும் நுண்ணறிவான விளக்கக்காட்சிகளுக்காக பயங்கரவாத எதிர்ப்புத் செயலாளர் நாயகம் திரு. வொரோன்கோவ் மற்றும் ஏனைய சுருக்க விளக்கவாளர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

மறைந்த திரு. நெல்சன் மண்டேலா அவர்களின் கூற்றான 'ஒரு சமூகத்தின் ஆத்மா சார்ந்த விளக்கமானது அது தனது சிறுவர்களை நடாத்தும் விதத்தை விட சிறந்ததாக இருக்க முடியாது' என்ற கூற்றை நான் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். இது முன்பை விட இப்போது மிகவும் பொருத்தமானது, ஏனெனில் பாகுபாடு, விலக்கு மற்றும் சமத்துவமின்மையால் சிறுவர்கள் விகிதாசாரமாக பாதிக்கப்படுவதை நாங்கள் காண்கின்றோம். வறுமையின் நீடித்த விளைவுகள், அனைத்து வகையான வன்முறை மற்றும் மோதல்களால் சிறுவர்களின் நிலை மோசமடைகின்றது.

தலைவர் அவர்களே,

துரதிர்ஷ்டவசமாக, இன்று எம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்பதைப் போல, அரசு சாராத செயற்பாட்டாளர்களின் கைகளிலான சிறுவர் படையினர் சார் நிலையை எனது நாடான இலங்கை அனுபவித்தது. இந்தக் குழு தமது மகன்களையும் மகள்களையும் அவர்களின் இராணுவ நோக்கங்களுக்காக வழங்குவதற்காக அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் குடும்பங்களுக்கு மிரட்டல் மற்றும் பயங்கரவாதத் தந்திரங்களைப் பயன்படுத்தியது. குடும்பங்கள் மறுத்தபோது, சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து கடத்தப்பட்டனர் அல்லது பலவந்தமாக வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தகைய ஆட்சேர்ப்பை எதிர்த்த பெற்றோர் வன்முறை, தடுப்புக்காவல் மற்றும் மரணத்தைக் கூட எதிர்கொண்டனர். இதுபோன்ற குழுக்களின் கைகளில் சிறுவர்களுக்கு என்ன நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

எனவே, 2009இல் இந்தக் குழு நடுநிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு கணிசமான பணிகள் காணப்பட்டன. கழுத்தை சயனைட் குப்பிகளை அலங்கரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்த சிறுவர்களை கவனித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்க்கையில் இயல்புநிலையை மீட்டெடுத்து, உற்பத்தி மிகுந்த மற்றும் பெருமைமிக்க பிரஜைகள் ஆவதற்கு உதவுவதே அரசாங்கத்தின் முதல் முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்தது.

இந்த சிறுவர் வீரர்கள் அனைவரும் - அவர்களில் 594 பேர் மறுவாழ்வு பெற்று, அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர். கட்டாயப்படுத்தலின் காரணமாக கல்வி கற்பது பாதிக்கப்பட்டவர்களுக்கும், முறையான கல்வியை நிறைவு செய்ய விரும்புவோருக்கும் விஷேட கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக, பல முன்னாள் சிறுவர் போராளிகள் தேசியப் பரீட்சைகளில் பங்கேற்றனர். 11 சிறுவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்விற்கு தோற்றியதுடன், அவர்களில் 03 பேர் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்து கொண்டனர். இன்னும் பலர் தொழிற்பயிற்சிகளுக்கு உட்பட்டு தற்போது அர்த்தமுள்ள வேலைவாய்ப்புக்களில் உள்ளனர்.

சயனைட் குப்பிகளைப் பிடித்துக் கொண்ட ஒரு சிறுவர் போராளியின் ஒரு சிறிய புகைப்படத்தை நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். இங்கே இருக்கும் மற்றொரு போராளி அவளை கையாளுபவர்களில் ஒருவருடன் இருப்பதுடன், அந்த நபர் தற்போது எந்த வித தண்டனையும் இன்றி உண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகின்றார். இது ஒரு டிரக்டர் வண்டியின் பின்புறத்தில் உள்ள சிறுவர் படையினரின் மற்றொரு புகைப்படம் ஆகும். தற்போது இவை இனிமேல் நாம் பார்க்க விரும்பாத விடயங்கள் ஆகும்.

வன்முறை மோதலில் ஈடுபடுதல் மற்றும் அன்புக்குரியவர்களை இழத்தல் ஆகியன சிறுவர்களின் வளர்ச்சி மற்றும் கல்வியை பாதித்து, அதிர்ச்சி மற்றும் ஏனைய உளவியல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இந்த சிறுவர்களுக்கு தொழில்முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஊனமுற்றோர், காயமடைந்தோர் மற்றும் மருத்துவத் தலையீடுகள் தேவைப்பட்டோர் நன்கு கவனிக்கப்பட்டனர். அவர்களுக்கு சொந்தமான உணர்வைத் தரும் வகையில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

கொள்கையின் அடிப்படையில், எந்தவொரு சிறுவர் போராளியும் தனது விசாரணைகள் மற்றும் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. இது ஐக்கிய நாடுகள் முகவரமைப்புக்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. உலகத்துடன் பகிர்ந்து கொள்ள இலங்கைக்கு ஒரு வெற்றிக் கதை இருந்தது - துரதிர்ஷ்டவசமாக இது இப்போது மறக்கப்பட்ட கதையாகவுள்ளது.

சர்வதேச சமூகத்தின் சில துறைகளும், ஐக்கிய நாடுகள் சபையின் சில நிறுவனங்களும் கூட இதுபோன்ற வெற்றிக் கதைகளை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது. பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக நாங்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்படுகின்றோம். இத்தகைய துயரங்களை தமது சொந்த சமூகத்துக்கும் சிறுவர்களுக்கும் கொண்டு வந்த இந்த அரசு சாராத செயற்பாட்டாளர்களின் மீதமுள்ள கூறுகளால் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் அவர்கள் தொடர்ந்தும் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள். இத்தகைய இரட்டைத் தரங்களுடன் பெறப்பட்ட அரசியல் நன்மைகளுக்கு அவர்கள் தொடர்ந்தும் பிணைக் கைதிகளாகவே இருக்கின்றார்கள். சிறுவர்கள் உட்பட மோதலிலிருந்து எழும் பிரச்சினைகளை நீடித்த முறையில் கையாள்வதில் நாம் தீவிரமாக இருந்தால், எம் கண்களுக்கு மேல் இருக்கும் கம்பளியை நாம் அகற்றுதல் வேண்டும். மனிதகுலத்திற்கான உண்மையான முன்னேற்றத்தை நாம் மேற்கொள்ள வேண்டுமானால், நாம் பொதுவான அடிப்படையில் செயற்பட வேண்டும் மற்றும் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.

தலைவர் அவர்களே,

இலங்கை தொடர்ந்தும் எமது சொந்த சிறுவர்களைக் கவனித்து, அனைவரும் சொல்லிக் கொள்வதற்கானதொரு வெற்றிக் கதை இருப்பதை உறுதி செய்வதோடு, உலகின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய சிறுவர்களும் ஒருநாள் இந்தத் துயரங்களிலிருந்து விடுபட்டு ஒரு மகிழ்ச்சியான மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாக வாழ்வதற்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.

நன்றி.

Please follow and like us:

Close