மனித உரிமைகள் பேரவை 48வது வழக்கமான அமர்வு
நிகழ்ச்சி நிரல் விடயம் 2: மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரால் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு
கௌரவ. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அவர்களின் அறிக்கை (ஜெனீவா, 2021 செப்டம்பர் 14)
தலைவி அவர்களே,
எமது அரசியலமைப்பு மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க, மனித உரிமை முறைமையினால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடனான எமது வலுவான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தனது மண்ணில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை ஒழித்தது. நாம் எமது மக்களின் நலனுக்காக சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ளோம். எமது ஜனநாயக மரபுகளை நாம் உறுதியாகப் பேணி வந்தோம் - மிகவும் அண்மையில் இடம்பெற்ற 2019ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களில், அதிக அளவிலான வாக்காளர்களின் பங்கேற்புடன் வழக்கமான இடைவெளியில் தேர்தல்கள் நடாத்தப்பட்டன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
குணப்படுத்துதல் என்ற கண்ணோட்டத்தில் மோதலுக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளக் கையாள்கின்றோம். மிகவும் அண்மையில், தீவிரமான பயங்கரவாதக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட 16 விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியனால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. மோதலுக்குப் பிந்தைய கண்ணிவெடி அகற்றல், புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களின் வெற்றியானது, தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
பேரழிவுகளை ஏற்படுத்தும் கோவிட்-19 தொற்றுநோயின் நாளாந்த சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை நான் முன்னிலைப்படுத்துகின்றேன்:
- காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அதன் முக்கிய செயற்பாடாக, ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து காணாமல் போனவர்களின் பட்டியலை இறுதி செய்கின்றது.
- இழப்பீட்டு அலுவலகம் இந்த ஆண்டு 3775 கோரிக்கைகளை செயலாக்கியுள்ளது.
- தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அதன் 8 அம்ச செயற்றிட்டத்தைத் தொடர்கின்றது.
- தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது.
- நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழுவொன்று சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், இதுபோன்ற வழக்குகளை விரைவாக சமாளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விரைந்து தீர்ப்பதும் நடைபெற்று வருகின்றது.
- பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், முந்தைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.
- நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு, நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், ஆதரவைப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் சிவில் சமூகத்துடன் தீவிரமான ஈடுபாட்டைப் பராமரிக்கின்றோம்.
தலைவி அவர்களே,
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினம் அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் மீது இலங்கை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து, அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அனைத்து மதங்களைச் சார்ந்த இலங்கையர்களைப் பாதுகாப்பதிலும் எப்போதும் போல நாம் விழிப்புடன் இருப்போம்.
தலைவி அவர்களே,
தீர்மானம் 46/1 ஆல் நிறுவப்பட்ட எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவை நாங்கள் நிராகரிக்கும் அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுகின்றன. தீர்மானம் 30/1 இனால் நாங்கள் அனுபவித்தபடி இது எமது சமூகத்தைத் துருவப்படுத்திவிடும். மனித உரிமைகள் பேரவை அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட வெளிப்புற முயற்சிகளால் அந்த நாட்டினால் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுடன், அது அரசியல்மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும். குறிப்பாக உலகின் பல பகுதிகளில் மனிதாபிமான மற்றும் ஏனைய ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக அவை அவசரமாகத் தேவைப்படும்போது, இந்த முயற்சியில் செலவிடப்பட்ட வளங்கள் தேவையற்றவை.
தலைவி அவர்களே,
கோவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய மற்றும் அழுத்தமான சவால்களின் கீழ், சமூக வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதை அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாக நாங்கள் கருதுகின்றோம். எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாம் வெளிப்படையாக இருக்கின்றோம், பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கமாக, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
தலைவி அவர்களே, நன்றி.
................................................
The video can be viewed through the following link: