ஊடக வெளியீடு
இலங்கையின் வளர்ச்சித் திறனை வெளிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கடல் தளத்தைப் புரிந்துகொள்ளுதல்: பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய சிறப்புரையாற்றினார்
'கடல்சார் தளத்தில் இலங்கையின் ஆர்வத்தை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' எனும் மெய்நிகர் மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய, இலங்கையின் கடல்சார் தளமானது இலங்கையின் வளர்ச்சித் திறனை வெளிப்படுத்தக்கூடியதும், அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற விஞ்ஞாபனததில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமைப் பகுதிகளை அடைந்து கொள்வதற்குமானதொரு முக்கிய அங்கமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் பாலசூரிய, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் எனத் தெரிவித்தார்.
அறிமுகக் கருத்துக்களை வழங்கிய வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கடல் வளங்களில் முதலீடுகளை மேற்கொள்ள உதவும் புதிய பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமச்சீரற்ற தன்மைகள், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, மற்றும் மிக முக்கியமாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல் மற்றும் பொருட்கள் பரிமாற்ற மையமாக மாறுவதற்கான இலங்கையின் லட்சியத்தை அடைவதறகான விதிகள் சார்ந்த கடல்சார் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கும் செயலாளர் கொலம்பகே அழைப்பு விடுத்தார்.
'கடல்சார் தளத்தில் இலங்கையின் ஆர்வத்தை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பிலான மெய்நிகர் மாநாட்டை இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியததின் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் நடாத்தியது. சிக்கலான கடல்சார் நிலப்பரப்பின் நீடித்த தன்மையை உறுதி செய்வதற்கும், கடல் சார்ந்த பொருளாதாரம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் கடல் நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்குவதற்கும் இலங்கை பின்பற்ற வேண்டிய உத்திகள் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டன.
கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருட்கள் பரிமாற்ற மையங்கள், கடல் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்கள் மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் அதன் மூலோபாய இருப்பிடத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் சவால்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, இந்த மாநாடு பிரபல்யமான பேச்சாளர்களை ஒன்றிணைத்தது.
தொடக்கக் கருத்தை நிகழ்த்திய தூதுவர் டெனிஸ் சைபி, பிராந்திய ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வளர்க்கும் நாடுகள் சர்வதேச சமூகத்தை பற்றுறுதியூட்டுவதற்காக அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளதுன், அவை ஒரு சக்தியை மற்றொன்றுக்கு மேல் தெரிவு செய்ய வேண்டியதில்லை எனக் குறிப்பிட்டார். கடல் சார்ந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கும், கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விதி அடிப்படையிலான கடல் நிர்வாகத்தின் முக்கியத்துவம் ஒரு முன்நிபந்தனையாகக் குறிப்பிடப்பட்டது. பரஸ்பரம் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பிராந்திய ஒத்துழைப்பை அடைவது எளிதானதல்ல என அவர் வலியுறுத்தினார். கடல்சார் வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு முயற்சிகள் உட்பட நிலையான அபிவிருத்தியில் இலங்கையை ஆதரிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இலங்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு முக்கியமான மற்றும் நீண்டகால வர்த்தக மற்றும் அபிவிருத்திப் பங்காளியாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் உள்ளதாக வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. தம்மிகா சேமசிங்க தெரிவித்தார். கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவு செயற்றிறன் மற்றும் ஆற்றல் மிக்கதும், வலுவானதுமாவதுடன், இது வழக்கமான இடைத்தொடர்புகள் மற்றும் இரு தரப்பினரும் நில யதார்த்தங்களைப் பற்றிய அதிகமான புரிதல்களால் குறிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருட்கள் பரிமாற்ற மையத்திற்கான முதலாவது குழுவானது, பொருட்கள் பரிமாற்ற மற்றும் போக்குவரத்திற்கான பெண்களின் உலகளாவிய தலைவரான திருமதி. கயானி டி அல்விஸ் அவர்களால் நிர்வகிக்கப்பட்டதுடன், அதில் சவுத் ஏசியா கேட்வே டேர்மினல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. ரொமேஷ் டேவிட், எஸ்.சி.எம். பிளஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பேர்ன்ஹார்ட் ஷுல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தின் முன்னாள் நிறுவனப் பணிப்பாளருமான கலாநிதி. ருவந்தி டி சில்வா மற்றும் ஷிப்பர்ஸ் அக்கடமி கொழும்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. ரொஹான் மஸ்கோரல ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
கடல் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த குழுவை, வயம்ப பல்கலைக்கழகத்தின் மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளத் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. செவ்வந்தி ஜயக்கொடி நிர்வகித்தார். குழுவில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியின் முகாமைத்துவத்திற்கான பணிப்பாளர் திரு. மஜூல அமரரத்ன, ஐரோப்பிய ஆணைக்குழுவின் பொது சுற்றுச்சூழல் பணியகத்தின் பல்லுயிர் அலகின் கொள்கை உத்தியோகத்தர் திரு. ஜுவான்-பப்லோ பேர்டிரெரா, ப்ளு ரிசோர்ஸ் ட்ரஸ்ட்டின் இணை ஸ்தாபகர் திரு. டேனியல் பெர்னாண்டோ மற்றும் என்வயர்மென்டல் பவுன்டேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், டபிள்யு.டபிள்யு.எஃப். ஹொங்கொங்கின் ஈரநிலம் மற்றும் வனவிலங்குக்கான பணிப்பாளருமான கலாநிதி. எரிக் விக்ரமநாயக்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது குழுவை வெளியுறவு செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே நிர்வகித்தார். இலங்கைக் கடற்படையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகமும், தலைமை நீரளவையியலாளரும் மற்றும் இலங்கை அரசசாங்கத்திற்கான இணைந்த தலைமை நீரளவையியலாளருமான வை.என். ஜயரத்ன, உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தலைவர் திரு. அலன் கோல், ஐரோப்பிய ஒன்றியக் கடற்படையின் பிரதித் தளபதி ரியர் அட்மிரல் கொராடோ கம்பனா, ஐரோப்பிய ஒன்றியத் திட்டம், இந்து சமுத்திரத்தின் சிக்கலான கடல் வழிகளின் குழுத் தலைவர் கேர்னல் (ஓய்வு பெற்ற) மார்ட்டின் கவுச்சி இங்க்லொட் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.
மூன்று குழுக்களையும் நிறைவு செய்யும் கருத்துரைகளை சுருக்கமாக பணிப்பாளர் நாயகம் திருமதி. திசாநாயக்க நிகழ்த்தியதுடன், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சாவித்ரி பானபொக்க அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்.
இந்த மெய்நிகர் மாநாட்டில் தூதுவர்கள், அறிஞர்கள், அரசாங்க அதிகாரிகள், தனியார் துறை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2020 டிசம்பர் 04
....................................
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களின் சிறப்பு உரை
கடல்சார் தளத்தில் இலங்கையின் ஆர்வத்தை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்துடன்
பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
2020 டிசம்பர் 03
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மாண்புமிகு டென்னிஷ் சைபி அவர்களே, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே அவர்களே, வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் மேலதிக செயலாளர்களே, லட்க்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் உறுப்பினர் திருமதி. சுகந்தி கதிர்காமர் அவர்களே,
மேன்மை தங்கியவர்களே, கௌரவ அதிதிகளே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே,
ஆயுபோவன் மற்றும் காலை வந்தனங்கள்!
'கடல்சார் தளத்தில் இலங்கையின் ஆர்வத்தை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்ற இந்த மெய்நிகர் மாநாட்டில் சிறப்புரையாற்றுவதை எனது கௌரவமாகக் கருதுகின்றேன்.
இன்று உலகெங்கிலும் உள்ள அனைத்து தலைவர்களிடமிருந்தும் நாம் கேட்கும் பொதுவான விடயம் என்னவென்றால், 'நாங்கள் நிச்சயமற்ற காலங்களில் வாழ்கிறோம்' என்பதாகும். இந்த நிச்சயமற்ற காலநிலையானது, குறுகிய காலத்தில் பொருளாதார மற்றும் சமூகச் செழிப்பை எய்துவதற்கான மனிதகுலத்தின் திறனுக்கு குறிப்பிடத்தக்க தடைகளை ஏற்படுத்தும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற நீண்டகால இருத்தலியல் அபாயங்கள் சார்ந்த அச்சுறுத்தல்களால் ஆதரிக்கப்படுகின்றது. இந்த நெருக்கடிகளை நாம் அந்தந்த சமூகங்களுக்கு அதிக சமத்துவத்தையும் செழிப்பையும் அடைவதற்கான வாய்ப்புக்களாக மாற்றுவது எப்படி என்பது தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கான கேள்வியாக அமைகின்றது. கையில் இருக்கும் மகத்தான பணியைக் கருத்தில் கொண்டு, எவ்வளவு சக்தியைக் கொண்டிருந்தாலும், ஏனைய பங்காளிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருதலைப்பட்சமாக ஒரு போக்கை நிர்ணயிக்கும் திறனை எந்தவொரு நாடும் கொண்டில்லை என்பதில் சந்தேகமில்லை.
இதனால்தான் இலங்கையின் மிகவும் நம்பகமான உலகளாவிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது முக்கியமானதாக அமைவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய முன்னுரிமையாகும். இந்த உறவின் வலிமையானது, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முதல் கலாச்சாரம் மற்றும் அரசியல் தளத்திற்கு பல்வேறு வகையான தொடர்புகளைப் பரப்புகின்றது. இலங்கையின் அனைத்து ஏற்றுமதியிலும் 30% ஆக, 2019ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய இடமாக இருந்தது. இலங்கை தனது ஏற்றுமதி அமைப்பை பன்முகப்படுத்தப்படுவதற்கும், புதிய சந்தைகளைத் தேடுவதற்கும் தொடர்ந்தும் வழிமுறைகளைக் கவனித்து வருவதால், எமது ஐரோப்பியப் பங்காளிகளுடனான வர்த்தக உறவைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் நாங்கள் உறுதியுடன் இருக்கின்றோம்.
எனது முக்கிய உரையில், இந்த மாநாட்டின் ஒட்டுமொத்தமான கருப்பொருள் தொடர்பான மூன்று பகுதிகளில் உரையாற்ற விரும்புகின்றேன். கடல் வர்த்தகத்தின் பின்னடைவை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், காலநிலை மாற்றத்தில் அதிகமான ஒத்துழைப்பை அதிகரித்தல், இறுதியாக கடல்சார் குற்றங்கள் குறித்து சில புள்ளிகளைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற தனது தொலைநோக்கு அறிக்கையில், வறுமைக் குறைப்பு, மக்களின் ஆரோக்கியத்தை அதிகரித்தல், அனைவருக்கும் கல்வி, தூய்மையான சூழல் ஆகிய அவரது நிர்வாகத்திற்கான நான்கு முக்கிய முன்னுரிமைப் பகுதிகளை கோடிட்டுக் காட்டினார். இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பொருளாதாரக் களத்திலும், மனித மூலதனத்திலும் இலங்கையின் வளர்ச்சித் திறனை அதிகரிப்பதற்கு, கடல்சார் தளம் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
கடல் வர்த்தகம்
சமீபத்திய வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் (UNCTAD) அறிக்கையின்படி, கோவிட்-19 தொற்றுநொயினால் உலகளாவிய கடல் வர்த்தகம் 2020ஆம் ஆண்டில் 4.1% சரிவை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய இடையூறுகள் இந்து சமுத்திரத்தின் முக்கிய கடல் மையமான இலங்கையையும் விட்டுவிடவில்லை. முடக்கம், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கான இடையூறு, கடற்படையினர் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களின் உடல்நலம் போன்ற அனைத்தும் எமது தற்போதைய பொருளாதார சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளன. உலகளாவிய கடல் வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது காலம் எடுக்கும் அதே வேளையில், அதிக தானியக்கமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் 'டேர்ன் அரவுண்ட் டைம்ஸ்' போன்ற முக்கிய துறைமுக செயல்திறன் குறிகாட்டிகளை மேம்படுத்துதல் போன்ற புதுமையான தீர்வுகள் மூலமாக எமது போட்டித்தன்மையை வர்த்தக மையமாக மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவதற்கானதொரு சரியான தருணம் இதுவாகும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த அச்சுறுத்தல்
சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து குறிப்பாக இந்து சமுத்திரத்தில் உள்ள அண்டை அரசுகள் எதிர்கொள்ளும் இருத்தலியல் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. பயனுள்ள காலநிலை சார் அபாயங்களைக் குறைக்கும் உத்திகளை உருவாக்குவதற்கு இந்து சமுத்திரத்திலுள்ள அனைத்து நாடுகளினதும் மட்டுமன்றி மேலதிக பிராந்திய செயற்பாட்டாளர்களிடமிருந்தும் ஒத்துழைப்புக்கள் அவசியமாகும். காலநிலை மாற்றம் தொடர்பான உள்ளக அரசாங்கங்கள் குழவினால் 2018 இல் புவி வெப்பமடைதல் குறித்து வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையில், உலக வெப்பநிலையை 1.5 பாகைக்குள் வைத்திருக்கத் தவறினால், 'விரைவான, தொலைநோக்கு மற்றும் முன்னோடியில்லாத மாற்றங்கள் சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் இருக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலையினால' தூண்டப்பட்ட இடம்பெயர்வு, உணவு உற்பத்தியிலான குறைப்பு, உட்கட்டமைப்பு இழப்பு ஆகியவை பொருளாதார அபிவிருத்தி, தேசிய மற்றும் மனிதப் பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னோடியில்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சுமைகளைக் கொண்டுள்ள அரசுகளை முழு அளவிலும் பாதிப்படையச் செய்யும். காலநிலை மாற்றம் ஒரு பெருகக்கூடிய அச்சுறுத்தலாக இருப்பதால், சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல், கடல் கொள்ளை போன்ற பல கடல்சார் பாதுகாப்பு இது போன்ற சவால்களை ஏற்படுத்துவதுடன், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவை மிகவும் சிக்கலானதாக மாறி, வளங்கள், அறிவுப் பகிர்வு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் அதிகரித்த ஒத்துழைப்புக்கள் தேவைப்படும். இந்தக் குறிப்பில், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி மீது குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்தும் ஸ்விட்சாசியா திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் தரத்தை உயர்த்துவதற்காக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இலங்கையின் சுற்றுலா போன்ற சில முக்கிய பொருளாதாரத் துறைகள் எமது சுற்றுச்சூழலின் தாக்கத்தைத் தணிக்க சிறந்த சுற்றுச்சூழல் தரங்களுடன் தொடர்ந்தும் உருவாகி வருவதை உறுதி செய்வதற்கு இத்தகைய திட்டங்கள் முக்கியமானதாக இருக்கும்.
கடல்சார் குற்றம்
கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது பிரச்சினையில், நான் முன்னிலைப்படுத்த விரும்பும் ஒரு பகுதி கடல்சார் குற்றங்களுக்கு எதிரான தற்போதைய போராட்டமாகும். விடுதலைப் புலிகளின் வன்முறைப் பிரிவினைவாதப் போராட்டத்திற்கு எதிரான இலங்கையின் பல தசாப்த கால போராட்டத்தின் போது, கடல்சார் பயங்கரவாதப் பிரிவுகள், சட்டவிரோத ஆயுதக் கப்பல்கள் மற்றும் கொள்ளைகளுக்கு எதிராக தனது கடல் எல்லைகளின் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கான அபாயகரமான சவாலுக்கு இலங்கை தொடர்ந்தும் செல்ல வேண்டியிருந்தது. இலங்கையின் கடற்படைகளின் மூலோபாய மற்றும் அபிவிருத்தியின் காரணமாக, நிதி ரீதியான குறிப்பிடத்தக்க செலவு மற்றும் கணிசமான மனித உயிரிழப்புக்கள் ஏற்பட்டாலும், இந்த சவால்களை எதிர்கொள்ள முடிந்தது. இந்த அனுபவங்கள் எமக்குத் தெரிவிப்பது என்னவென்றால், கடற்படையின் திறனை வளர்ப்பதற்காக அரசுகளிடையே ஒத்துழைப்பையும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கூட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல் பகிர்வையும் அதிகரித்தல் வேண்டும்.
வன்முறை சார்ந்த அரசு அல்லாத செயற்பாட்டாளர்களின் எழுச்சியுடன் நெருக்கமாக இணைந்திருப்பதே இந்து சமுத்திரத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தின் வளர்ச்சியாகும். இந்து சமுத்திரத்தில் பல்வேறு அதிகரித்து வரும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளின் எண்ணிக்கையானது, குற்றவியல் மற்றும் பயங்கரவாத வலைப்பின்னல்கள் தொடர்ந்தும் இந்து சமுத்திரத்தை ஒரு கடத்தல் வலையமைப்பாக இலக்கு வைத்து தமது தயாரிப்புக்கள் ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் அடைவதற்கான ஒரு வழியாக உபயோகிப்பதனை குறித்து நிற்கின்றது. இதுபோன்ற வலையமைப்புக்களிலிருந்து கிடைக்கும் இலாபங்கள் பல ஆப்கானிஸ்தானில் இருந்து சோமாலியா வரை பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு நிதியளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் காணப்படுவதன் காரணமாக, போதைப்பொருள் வர்த்தகத்தை இனி ஒரு தனிப்பட்ட அச்சுறுத்தலாக தனிமைப்படுத்த முடியாது. தமது சமூகங்களில் போதைப்பொருளினாலான சமூகக் கேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள தலையீட்டு உத்திகளை நிலைநிறுத்த அதிக பிரயத்தனங்களை மேற்கொள்வதன் காரணமாக, போதைப்பொருள் வர்த்தகம் குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மீது ஏற்படுத்தும் விளைவுகள் அபிவிருத்தியடைந்து வரும் அரசுகளுக்கு மேலதிக நிதிச் சுமைகளை ஏற்படுத்தும். ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் போன்ற ஐ.நா. நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை இந்த நடவடிக்கைகளை குறைப்பதிலான எமது கடமைகளையும் பொறுப்புகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
முடிவுரை
நான் எனது உரையை நிறைவு செய்வதற்கு முன், இன்றைய மாநாட்டிற்கும் மற்றும் இன்றைய கலந்துரையாடல்கள், பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் வியக்கத்தக்க அவதானிப்புக்களை மட்டுமல்லாமல், மேலதிக ஆய்வு மற்றும் செயலாக்கத்திற்குத் தகுதியான சில செயற்பாட்டு உத்திகளையும் வழங்க வேண்டும் என்றும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இறுதியாக, நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, எமது தனிப்பட்ட தடைகள் குறித்து நாங்கள் பின்வாங்குவதோடு, சிறந்ததை நம்புகின்றோம் அல்லது அனைவருக்கும் சமாதானத்தையும் செழிப்பையும் தரும் அதிக ஒத்துழைப்பை நோக்கி செயற்படுவதற்கான பாலங்களை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தற்போதைய சந்தர்ப்பத்தை நாங்கள் கருதுகின்றோம் ஆகிய இரண்டு கருத்துக்களையும் கூறி எனது கருத்துக்களை நிறைவு செய்ய விரும்புகின்றேன்.
The full video can be viewed at : https://youtu.be/wOe3CZwlaY4