அமெரிக்காவின் திறைசேரிகள் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்க திறைசேரிகள் திணைக்களத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பிரதி உதவிச் செயலாளர் ராபர்ட் கெப்ரோத் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் ஆசிய பணியகத்திற்கான பிரதி உதவி நிர்வாக அதிகாரி அஞ்சலி கர் ஆகியோருடனான, சமீபத்தைய இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவர்கள் தமது விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன், 2024 டிசம்பர் 6 முதல் 7 வரையிலான காலப்பகுதியில் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இலங்கைக்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை இவ்விஜயம் வலியுறுத்தியதுடன், பிராந்திய அமைதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயக வளர்ச்சி ஆகியவற்றில் இருதரப்பினரதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
இத்தூதுக்குழுவினர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து, இலங்கையின் பொருளாதார மீட்சி, தற்போதைய ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் ஆட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து கலந்துரையாடினர். இவ்வுரையாடல்களின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க, கிராமிய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் பொதுத்துறையின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பிலான தனது தொலைநோக்குப் பார்வையையும் குறிப்பிட்டிருந்தார்.
2024, டிசம்பர் 06 அன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பொன்றை நிகழ்த்திய தூதுக்குழு, பொருளாதார மீட்சி மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
மேலும், பிராந்திய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இக்குழுவினர் பயனுறுதிமிக்க கலந்துரையாடல்களை நிகழ்த்தினர். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் (EFF) திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்விற்கான தூதுக்குழுவினருக்கு அமைச்சர் விளக்கமளித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதியைப் பேணுவதுடன், அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுமெனவும் உறுதியளித்தார். அவர் மேலும், இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்கா அளித்துவரும் தொடர்ச்சியான ஆதரவை பாராட்டுதல்களுடன் நினைவுகூர்ந்தார். இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப எதிர்கால சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையத்தின் திட்டங்களை வடிவமைப்பதில் அமெரிக்காவின் தீவிர ஆர்வத்தை பிரதி உதவி நிர்வாக அதிகாரி கர் வெளிப்படுத்தினார்.
இவ்விஜயமானது, இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான உறவின் சான்றாக விளங்குவதுடன், இரு நாடுகளும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் எதிர்வரும் ஆண்டுகளில் வலுவான உறவுகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளன.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2024 டிசம்பர் 13