அரசாங்கத்தினால் திரிபீடகாபிவந்தனா வாரம் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், அதற்கான மனப்பூர்வமான நிகழ்வொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று (22) நடைபெற்றது. யுனெஸ்கோவின் கீழான உலக மரபுரிமைப் பதிவில் தேரவாத திரிபீடகத்தை உள்ளடக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய நடைமுறையுடன் இணைந்ததாக, 2019 மார்ச் 16 முதல் 23 வரையான காலப்பகுதி திரிபீடகாபிவந்தனா வாரமாக பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊழியர்களுடன் இணைந்து 'யுனெஸ்கோவின் கீழான உலக மரபுரிமைப் பதிவில் தேரவாத திரிபீடகத்தை உள்ளடக்குவதற்கான முக்கியத்துவம் குறித்த சத்தியப்பிரமாணம்' மேற்கொள்வதன் மூலமாக காலை வேளையில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வணக்கத்திற்குரிய ஒலந்தே ஆனந்த தேரர் அவர்களினால் திரிபீடகத்துடன் தொடர்பான தம்ம பிரசங்கமொன்று நிகழ்த்தப்பட்டது.
தூதரகங்களின் பல்வேறு தலைவர்கள் உள்ளடங்கலாக கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊழியர்கள் ஆகியோர் தம்ம பிரசங்கத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், உலக மரபுரிமைப் பதிவில் தேரவாத திரிபீடகத்தை இடம்பெறச்செய்வதற்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக, உலகலாவிய ரீதியில் திரிபீடகாபிவந்தனா வாரத்தை இலங்கைத்தூதரகங்களினுடாக அனுஷ்டிப்பதற்கான பல்வேறு நிகழ்வுகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2019 ஜனவரி 05ஆந் திகதி தேரவாத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்தார். தற்போது அதனை உலக மரபுரிமைப் பதிவில் இடம்பெறச்செய்வதற்கான தேசிய நடைமுறைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
22 மார்ச் 2019