மியான்மாரில் ஆட்கடத்தலுக்குட்பட்ட முப்பத்திரண்டு (32) இலங்கையர்கள் மீட்பு

மியான்மாரில் ஆட்கடத்தலுக்குட்பட்ட முப்பத்திரண்டு (32) இலங்கையர்கள் மீட்பு

 

ஆட்கடத்தலுக்கு உட்பட்டு மியன்மாரில் சிக்கியிருந்த முப்பத்திரண்டு (32) இலங்கைப் பிரஜைகள் வெற்றிகரமானதொரு ஒருங்கிணைந்த செயல்முறையைத் தொடர்ந்து நவம்பர் 25 அன்று மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கையர்கள் இணையக் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு ஆட்கடத்தலுக்கு பலியாகியுள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு எதுவிதத் தாமதமுமின்றி திருப்பி அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) ஒருங்கிணைந்து செயற்படும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுடன், தாய்லாந்து மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதுவர்கள் இச்செயல்முறையை ஒருங்கிணைத்தனர். கடத்தப்பட்ட இலங்கையர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்திய வணக்கத்திற்குரிய மாளிகாவில அஸ்ஸாஜி தேரர், இச்செயல்முறையை எளிதாக்க வழிவகுத்தார்.

கடந்த வாரம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க மியான்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு அவசர பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய 32 இலங்கையர்கள் நவம்பர் 25 ஆம் திகதி மே சொட் எல்லையூடாக பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவரால் வரவேற்கப்பட்டனர். அவர்கள் தற்போது, தாய்லாந்தின் தக் மாகாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நலன்புரித் தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2024, ஏப்ரல் மற்றும் 2024, ஆகஸ்ட் இல் மியான்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஒருங்கிணைப்புடன் இலங்கை அரசாங்கத்தால் மொத்தம் 28 இலங்கையர்கள் மீட்கப்பட்ட இரண்டு செயல்முறைகளைத்தொடர்ந்து, தற்போதைய மீட்பு இடம்பெற்றுள்ளது.

ஆட்கடத்தல் சூழ்ச்சித் திட்டங்களுக்கு பலியாகாமல் இருக்க, வெளிநாட்டு வேலை தேடும் இலங்கையர்கள், அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்துகிறது. அவர்கள் வெளிநாட்டு வேலையொன்றை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) தங்களுடைய வேலை வாய்ப்புகள் அல்லது அதற்கான முனைவு வாய்ப்புக்களை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின், இணையத்தளத்தைப் பார்வையிடவும்: http://www.slbfe.lk; அல்லது மேலதிக விபரங்களுக்கு SLBFE 1989 இல் தொடர்புகளை மேற்கொள்ளவும். (24 மணிநேர அழைப்பு மையம்)

 

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2024, நவம்பர் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close