தூதரகமும், நிரந்தர தூதர் பணியகமுமான வியானாவுக்கான இலங்கைத்தூதரகம், இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்துடன் இணைந்து, 2023 ஆகஸ்ட் 12 அன்று இலங்கை யானைகள் இரண்டினை பரிசளித்தமைக்கான 10 ஆண்டுகள் நிறைவையும், சர்வதேச யானைகள் தினத்தையும் ப்ராக் மிருகக்காட்சியகத்தில் கொண்டாடியது.
இலங்கை அரசானது செக் குடியரசுடனான தமது இருதரப்பு உறவுகளின் மைல்கல்லை குறிக்குமுகமாக, 2012 அக்டோபர் ப்ராக் மிருகக்காட்சியகத்திற்கு, "தமரா" மற்றும் " ஜனிதா" ஆகிய பெயர்களையுடைய இரு யானைகளை பரிசளித்தது. அம்மிருகக்காட்சியகத்தின் முதல் யானையான "பேபி", 1993 இல் இலங்கையால் பரிசளிக்கப்பட்டதாகும். மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார், "சுந்தரி" மற்றும் "கதிரா" ஆகிய பெயர்களைக்கொண்ட யானைகளை 1970 இல் ப்ராக் மிருகக்காட்சியகத்திற்கு பரிசளித்தார்.
இவ்வதிகார பூர்வ நினைவு விழாவானது, ப்ராக் மிருகக்காட்சியகத்தை விளம்பரப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்த்ததுடன், செக் நாட்டினர் அதிகளவில் ப்ராக் மிருகக்காட்சியகத்திற்கு வருகை தந்து, கலந்து சிறப்பித்த ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. இவ்விழாவில் செக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, அரச நிறுவனங்கள், போக்குவரத்து முகவர் நிறுவனங்கள் போன்றவற்றின் அதிகாரிகள் மற்றும் பத்திரிகை, இலத்திரனியல் ஊடக நிருபர்கள் போன்றோர் வருகை தந்திருந்தனர்.
தூதரகப் பொறுப்பாளர், சரித வீரசிங்ஹ தனது வரவேற்புரையில், இலங்கையுடன் 1957 இன் முன்னரான செக்கஸ்லோவாக்கியா மற்றும் 1993 இன் பின்னரான செக் குடியரசிற்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட காலத்திலிருந்து, நீடித்த நட்பின் அடையாளமாக யானைகள் விளங்குவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் கலந்து சிறப்பித்தவர்களுக்கு முடிவிலியான கடற்கரை, காலத்தை மிஞ்சிய சரித்திர பெருமை வாய்ந்த புராதன சிதைவுகள், சிறந்த உபசரணையுடன் கூடிய விருந்தோம்பல் குணமுடைய மக்கள், வனவிலங்கு பல்வகைமை, உலகப்பிரசித்தி பெற்ற தேயிலை, அறுசுவையான உணவு ஆகியவற்றின் அனுபவத்தை பெறுவதற்கு இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
செக் குடியரசு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின், ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பிரதிநிதி கத்ரீனா வோவ்கோவா, தனது உரையின் போது, தூதரகத்தின் முனைப்பையும், நிறைவு விழாவை ஒழுங்குபடுத்தியதையும் பாராட்டியதுடன், புதுடில்லியிலுள்ள செக் தூதர் பணியகத்தில் இராஜாங்க பிரதிநிதியாக கடமையாற்றிய காலத்தில், இவ்விரு யானைகளை செக் குடியரசிற்கு கொண்டுவந்தமை குறித்த தனது பிரத்தியேக அனுபவத்தையும் விளக்கியிருந்தார்.
ப்ராக் மிருகக்கட்சியக பிரதி பணிப்பாளர் (மக்கள் தொடர்புகள்), மார்க்கெட்டா ஹொய்டேக்ரோவா, யானைகளை பரிசளித்தமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, ஆரம்ப காலத்திலிருந்து ப்ராக் மிருகக்காட்சியகத்திற்கும் இலங்கைக்குமிடையிலான சரித்திர தொடர்புகளையும் நினைவு கூர்ந்தார். மேலும் ப்ராக் மிருகக்காட்சியகத்தில் பணியாற்றும் எட்டு யானைப்பாகன்கள் தங்கள் தொழிற்தேர்ச்சி, மற்றும் யானைகளை பராமரிக்கும் நேர்த்தியான தன்மைக்கும் தூதராகத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாக்கொண்டாட்டத்தில், திறன்பேசிக்கு தரவிறக்கம் செய்துகொண்டு, சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் இலங்கைக்கு சுற்றுலா என பகிருவதற்கான உடனடி இலவச புகைப்பட சேவைச்சாவடியொன்றும் நிறுவப்பட்டிருந்தது.
ப்ராக் மிருகக்காட்சியகத்தில், "So Sri Lanka" ( இலங்கை மயம் ) என்ற குறிச்சொல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், அக்குறிச்சொல் அச்சிடப்பட்ட குடிநீர் கோப்பைகள், கோடைக்கால தொப்பிகள், சாவிக்கொழுவிகள், மற்றும் பைகள் விநியோகம் செய்யப்பட்டன. ப்ராக் மிருகக்காட்சியகத்தின் தள விளம்பர மேம்பாட்டு நிகழ்வானது, வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட சுற்றுலாத்துறை விளம்பர கொடிகள், மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தியிருந்தது. சுற்றுலாத்துறை விளம்பர கையேடுகள் மற்றும் வரைபடங்கள் போன்றவை சாத்தியப்பாடுடைய சுற்றுலா பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
பிரதம விருந்தினர்களுக்கும், வருகை தந்திருந்த பொதுமக்களுக்கும் சிலோன் தேநீரும், இலங்கையின் பாரம்பரிய உணவும் பரிமாறப்பட்டன.
இலங்கை தூதரகம் மற்றும் நிரந்தர தூதர் பணியகம்
வியானா
2023 ஆகஸ்ட் 18