பிரேசிலில் உள்ள கோயாஸ் மாநிலத்தின் வர்த்தகம், தொழில்கள் மற்றும் சேவை சங்கத்துடன் தேசிய வர்த்தக சம்மேளனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

பிரேசிலில் உள்ள கோயாஸ் மாநிலத்தின் வர்த்தகம், தொழில்கள் மற்றும் சேவை சங்கத்துடன் தேசிய வர்த்தக சம்மேளனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் பிரேசிலில் உள்ள கோயாஸ் மாநிலத்தின் வர்த்தகம், கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் சங்கம் ஆகியவை பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனுசரணையின் கீழ் 2023 பெப்ரவரி 01ஆந் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தீபால் நெல்சன் மற்றும் கோயாஸ் மாநிலத்தின் வர்த்தகம், தொழில்கள் மற்றும் சேவைகள் சங்கத்தின் தலைவர் ரூபன்ஸ் ஃபிலேட்டி ஆகியோர் இணையவழி மெய்நிகர் தளத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மூலம் இரு வர்த்தக சங்கங்களுக்குமிடையே பொருளாதார நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கான தளத்தை வழங்குகின்றது.

கைச்சாத்திடும் விழாவின் போது, 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு சங்கங்களும் கலந்துரையாடியதுடன், இதில் இணையவழி வணிக இணைப்பு, சந்தை விழிப்புணர்வு அமர்வுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளின் பரிமாற்றங்கள் ஆகியவை உள்ளடங்கும்.

பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க தனது சிறப்புரையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துதல், வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல், தகவல்களைப் பகிர்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக தனியார் துறை ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கான நீண்டகால தேவையை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதாக வலியுறுத்தினார்.

2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கோயாஸ் மாநிலத்தில் இலங்கை வர்த்தகங்களுக்கான வாய்ப்புக்களை ஆராய்வதற்கும், இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குமாக தூதுவர் சுமித் தசநாயக்க அவர்கள் கோயாஸ் மாநிலத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் விளைவாகவே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

208.672 பில்லியன் பிரேசில் டொலருக்கும் மேலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், கோயாஸ் பிரேசிலில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் மாநிலமாகவும், வர்த்தகம், விவசாயம், கால்நடைகள், சுரங்கம் மற்றும் உணவு உற்பத்தியில் முன்னணியிலும் உள்ளது. 29,732 பிரேசில் டொலர் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட அதன் 7.2 மில்லியன் மக்கள், இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு மிகச் சிறந்த சந்தையை உருவாக்குகின்றனர்.

இலங்கைத் தூதரகம்

பிரேசில்

2023 பிப்ரவரி 10

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close