வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் 2023 பெப்ரவரி 04ஆந் திகதி 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் கொண்டாடியது.
பாரம்பரியத்திற்கு ஏற்ப, தூதுவர் தேசியக் கொடியை ஏற்றியவுடன் கொண்டாட்டங்கள் தொடங்கியதைத் தொடர்ந்து, சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பாரம்பரிய தீபம் ஏற்றப்பட்டு தாய்நாட்டின் சார்பாக உயிர் தியாகம் செய்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறித்தவ சமய அனுஷ்டானங்களுடன் விழா நடைபெற்றது.
வொஷிங்டன் டி.சி.யிலுள்ள பௌத்த விகாரையின் பிரதம வதிவாளரும், வட அமெரிக்காவின் பிரதம சங்க நாயக்கருமான வணக்கத்துக்குரிய மஹரகம தம்மசிறி நாயக்க தேரர், மேரிலண்ட் பௌத்த விகாரையின் பிரதம அதிபரும் வட அமெரிக்காவின் பிரதான நீதித்துறை சங்க நாயக்கருமான வணக்கத்திற்குரிய கட்டுகஸ்தோட்டை உபரதன நாயக்க தேரர் மற்றும் வொஷிங்டன் டி.சி.யிலுள்ள மஹாமெவுனாவ பௌத்த தியான நிலையத்தின் பிரதமகுருவான வணக்கத்துக்குரிய தலாவே தமித போதி தேரர் ஆகியோரால் பௌத்த மத அனுஷ்டானங்கள் நிகழ்த்தப்பட்டன. இந்து சமய வழிபாடுகளை சுவாமி ரகுபதி குருக்கள் அவர்களும், இஸ்லாமிய வழிபாடுகளை கடாபி இஸ்மாயில் அவர்களும், கிறிஸ்தவ வழிபாடுகளை வொஷிங்டன் டி.சி., அப்போஸ்தலிக்க நன்சியேச்சர் முதன்மைச் செயலாளர் வணக்கத்திற்குரிய மான்சிக்னர் ஜான் போல் பெத்ரேராவும் நடாத்தினர்.
75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் மற்றும் இலங்கையின் சுதந்திர தினம் மற்றும் பல ஆண்டுகளாக மக்கள் எதிர்கொண்ட அனைத்து இன்னல்கள் மற்றும் கொந்தளிப்புக்களை தைரியமாக எதிர்கொண்டதற்காக வாழ்த்தி வீடியோ செய்தியை அனுப்பி வைத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவிச் செயலாளரான தூதுவர் டொனால்ட் லுவின் வாழ்த்துச் செய்தி ஆகியன வாசிக்கப்பட்டன. அவர் தனது முதலாவது இலங்கை விஜயத்தையும், மக்களின் அரவணைப்பையும், நாட்டின் அழகையும் சிறப்பையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பதையும் நினைவு கூர்ந்தார். தூதுவர் லு, இரு நாடுகளும் எவ்வாறு ஒரு சிறப்பான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், இலங்கையின் எதிர்காலம் மற்றும் அபிவிருத்தியில் அமெரிக்காவின் ஆதரவை உறுதியளித்தார்.
தூதுவர் மகிந்த சமரசிங்க உரையாற்றுகையில், 450 வருடகால அந்நிய ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனத்தின் பின்னர் இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றது என்பதை நினைவு கூர்ந்தார். அன்றிலிருந்து 75 வருட பயணத்தின் பிரதிபலிப்புக்கு தற்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில் நாம் நேர்மறை மற்றும் எதிர்மறையான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 75 வருட காலப்பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக, இலங்கை பயங்கரவாதத்தின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றை எதிர்த்துப் போராடி வருவதாக அவர் நினைவு கூர்ந்தார். மேலும், இரண்டு இளைஞர் கிளர்ச்சிகள் நடைபெற்றதையும் அவர் குறிப்பிட்டார். பல இளைஞர்கள் மரணித்தும், காணாமல் போயும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். இந்த நபர்களுக்கு பொறுப்புக் கூறுமாறுஇலங்கை சர்வதேச ரீதியில் கோரப்பட்டுள்ளது.
தூதுவர் சில சாதகமான அம்சங்களை எடுத்துரைத்தார். தெற்காசியாவில் திறந்த பொருளாதார மாதிரியை ஏற்றுக்கொண்டு, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் இலவசக் கல்வியில் தொடர்ந்தும் முதலீடு செய்த முதல் நாடு இலங்கை ஆகும். இந்தக் கொள்கை முயற்சிகளில் சிலவற்றில் இலங்கை முன்னோடியாக இருந்தது. மக்கள் மீதான இந்த முதலீடுகள் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட மனித அபிவிருத்தியின் உயர் மட்டங்களில் பிரதிபலித்தன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கான சர்வதேச ஆதரவின் நிலைகள் குறித்து அவர் குறிப்பிட்டதுடன், பரந்துபட்ட மக்கள் பிரிவினரிடையே விரிவான நல்லிணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமை உணர்வை அடைவதற்கான வாய்ப்பை நாடு தவறவிட்டதாகக் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு இளைஞர்கள் நடாத்திய போராட்டங்கள் குறித்து குறிப்பிடுகையில், அரசாங்கம் கவனம் செலுத்தத் தயாராக இருப்பதாக ஒரு தெளிவான செய்தி தெரிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்களிடையே அரசியல், இன, மத வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று கருத்தும் தெரிவிக்கப்பட்டது. சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லும் முயற்சியில் ஐக்கியத்தை மேம்படுத்தும்இளைஞர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்க ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஒரு பல்லின கலாச்சார, பல இன, பல மத மற்றும் பல மொழி பேசும் தேசம் என்பதை ஏற்றுக்கொள்வதும், பாரபட்சம் மற்றும் பிளவுகள் இல்லாத ஒரு தேசிய அடையாளத்தை கட்டியெழுப்ப அனைவரும் பாடுபடுவது அவசியமானது என தூதுவர் சமரசிங்க மேலும் தெரிவித்தார். நமது பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய வலிமையின் ஆதாரம் என்பதை அங்கீகரிப்பது நிலையான அபிவிருத்தியை விளைவிக்கும் நிலையான அமைதியை அடைவதன் மூலமான முன்னேற்றத்திற்கு ஒரு முன்நிபந்தனையாகும்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சுதந்திர தின விழா நிறைவு பெற்றது.
இலங்கைத் தூதரகம்
வொஷிங்டன் டிசி.
2023 பிப்ரவரி 09