இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் ஆதரவுடனும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலுடனும், 'பூமியில் ஒரு சொர்க்க அனுபவத்தைப் பெற, 'இலங்கைக்கு வரவேற்கிறோம்' என்ற தொனிப்பொருளின் கீழான 'சுற்றுலா ஊக்குவிப்பு சாளரத்தை' ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஃபலாஹ் மௌலானா அல்ஹாப்ஷி, ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் வைத்து பயண இயக்குனர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கையின் சவுதி நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் முன்னிலையில், 2022 டிசம்பர் 12ஆந் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
தனது ஆரம்ப உரையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை நினைவு கூர்ந்த துணைத் தூதுவர், இலங்கைக்கான தொடர்ச்சியான ஆதரவிற்காக சவுதி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், துணைத் தூதரகம் சுற்றுலா விசாவை சில நிமிடங்களிலேயே வழங்குவதாகவும், இலங்கையின் இயற்கை அழகையும் விருந்தோம்பலையும் பார்வையிடவும் மற்றும் அனுபவிக்கவும் அனைத்து சவூதி பிரஜைகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் துணைத் தூதுவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சில விருந்தினர்கள் இலங்கைக்கான தமது பயணங்களை நினைவு கூர்ந்ததுடன், இலங்கை மக்களின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
அங்குரார்ப்பண நிகழ்வின் போது குறியீட்டு விசா வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.
இலங்கையின் துணைத் தூதரகம்,
ஜித்தா
2022 டிசம்பர் 16