தாய்லாந்து பிரதமர் 2018 யூலை 12 - 13 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

தாய்லாந்து பிரதமர் 2018 யூலை 12 – 13 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பிற்கு இணங்க, தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்கள் 2018 யூலை 12 தொடக்கம் 13 வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 நவம்பர் மாதத்தில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னணியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அவர்கள் யூலை 12ஆந் திகதி மாலை வேளையில் இலங்கையை வந்தடையவுள்ளார். யூலை 12ஆந் திகதி மாலையில், அவர் ஜனாதிபதி சிறிசேன அவர்களினால் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வ அணிவகுப்பு மரியாதை மற்றும் மரியாதை வேட்டுக்களுடன் வரவேற்கப்படுவார். அதன் பின்னர், இலங்கைக்கும், தாய்லாந்திற்குமிடையிலான கலாச்சாரம் முதல் வணிகம் வரையானதும், மக்கள் - மக்களுக்கிடையிலான தொடர்பு சார்ந்ததுமான முழுமையான இருதரப்பு ஈடுபாடுகள் குறித்த இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. வருகை தரும் தாய்லாந்து பிரதமர் மற்றும் தூதுக்குழுவினருக்கு ஜனாதிபதி அவர்கள் தனது இல்லத்தில் உத்தியோகபூர்வ விருந்துபசாரமொன்றினை அன்று மாலை வேளையில் வழங்குவார்.

இந்த விஜயத்தின் போது பின்வரும் ஆவணங்களில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன:

  • குற்றவாளிகளை பரிமாற்றுதல் மற்றும் குற்றவியல் தண்டனைகளை நடைமுறைப்படுத்தல் மீதான சாசனம்
  • மூலோபாய பொருளாதார பங்காண்மை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
  • ஆரம்பநிலை உற்பத்திகளின் பெறுமதி உட்சேர்ப்புடன் சார்பான தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
  • இலங்கையின் தன்னிறைவு பொருளாதார தத்துவத்தை பயன்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்ட பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரியின் மீதான ஒத்துழைப்பிற்கான இணைந்த நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டம்

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான சாத்தியமான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளமை இந்த விஜயத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமருக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் காலை விருந்துபசாரமொன்றை அளிப்பதுடன், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு, வியாபாரம் மற்றும் முதலீடுகள் போன்றவற்றை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

எமது பகிரப்பட்டதும், வரலாற்று ரீதியானதுமான கலாச்சார பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும் முகமாக, பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அவர்கள் கண்டியிலுள்ள புத்தரின் புனித தந்ததாது உள்ள விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், சியம் பிரிவின் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அதி வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளார். அவர் மேலும் இலங்கைக்கான தனது விஜயத்தின் அடையாளமாக பேராதனையிலுள்ள ரோயல் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று ஒன்றையும் நாட்டவுள்ளார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

2018 யூலை 10

Please follow and like us:

Close