இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களின் உரை
மனித உரிமைகள் பேரவையின் 58வது வழக்கமான அமர்வு
உயர்மட்டப் பிரிவு
மேதகு சபைத்தலைவர் அவர்களே,
மேதகு தலைவர்களே,
தலைவர் அவர்களே, இப்பேரவையின் தலைவராக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து, எனது பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் அவர்களே,
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில், இலங்கை மக்கள் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை நோக்கி நாட்டை வழிநடத்த வலுவான ஆணையொன்றுடன் கூடிய, புதிய அரசாங்கமொன்றைத் தேர்ந்தெடுக்க முற்போக்கானதொரு முடிவை எடுத்தனர். 2024 நவம்பரில் நடைபெற்ற இத்தேர்தல்களின் முடிவுகள் பல முனைகளில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு - மற்றும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும், நேர்மறையான மாற்றத்திற்கானதொரு ஆதரவாக கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த குரலை பிரதிபலித்தது. தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட தற்போதைய பாராளுமன்றம் வரலாற்றில், இரண்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒரு பார்வைக் குறைபாடுள்ள நபர் ஆகியோரைக்கொண்டதும், அனைத்து தரப்பினரையும் பிரதிநித்துவப்படுத்துவதுமான ஒன்றாவதுடன், இம்முறை அதிக எண்ணிக்கையிலான பெண்களைக்கொண்டதுமாக அமைந்துள்ளது. பாலினம், இனம் அல்லது ஏனைய காரணிகளைப் பொருட்படுத்தாமல், நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும், இலங்கையின் புதிய பாதையை இவ்வுள்ளடக்கம் பிரதிபலிக்கிறது.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின், தொடக்க விழாவில் நமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையிலிருந்து நான் பின்வருவதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்: “தேர்தல்கள் மக்களுக்கும் நமக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன. நாட்டின் எதிர்காலம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டும் நமது கொள்கை அறிக்கைகள் மற்றும் யோசனைகளை நாம் முன்வைக்கும்போது இப்பிணைப்பு உருவாகிறது. இந்த யோசனைகளில் நம்பிக்கை வைக்கும் மக்கள் நமக்காக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். மக்கள் தங்கள் வாக்குகள் மூலம், ஆட்சி செய்வதற்கான ஆணையை எங்களுக்கு வழங்குவதன் மூலம் இப்பிணைப்பில் தங்கள் பங்கை நிறைவேற்றியுள்ளனர். எனவே, இது, மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நமது பங்கை நிறைவேற்ற வேண்டிய முறையாகும் .”
தலைவர் அவர்களே,
2022 ஆம் ஆண்டில், இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு அதன் ஆழமான மற்றும் மிகவும் சிக்கலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கடந்தது. பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மக்கள்தொகையின் அனைத்துப் பிரிவுகளையும், குறிப்பாக சமூகத்தின் மிகவும் ஏழ்மையானதும், நலிவானதுமான மக்களைக்கொண்ட பிரிவுகளையும் பாதிக்கும் ஒரு மனிதாபிமான சூழ்நிலையை உருவாக்கியது உங்களுக்குத் தெரியும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதுடன், வாய்ப்புகளை நியாயமான முறையில் வழங்குவதன் மூலம் பொருளாதார மாற்றத்துடன், பொருளாதார ஜனநாயகமயமாக்கலுக்கான அடித்தளத்தை அமைக்கும் தீவிர செயற்பாட்டில் தற்போது நாம் இருக்கிறோம். நமது மக்கள், குறிப்பாக நலிவடைந்தவர்கள் மீது பொருளாதார சவால்களின் தொடர்ச்சியான தாக்கத்தை நாங்கள் நன்கு அறிவோம், மேலும் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டில், சமூக நலன் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகரித்த ஒதுக்கீடு உட்பட மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் மற்றும் தம்மேம்பாட்டு அதிகாரமளிப்பு ஆகியவற்றை வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். குறிப்பிடத்தக்க வகையில், இம்முறை வகுக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒதுக்கீடுகளைச் மேற்கொண்டுள்ளன; மேலும் பெண்கள், அனாதைக் குழந்தைகள், ஊனமுற்றோர் அல்லது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், தோட்டத் துறை மக்கள், மாணவர்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்டின் மோதல்களால் பாதிக்கப்பட்ட அல்லது வளர்ச்சியடையாத பகுதிகளில் வாழும் மக்கள் போன்ற நலிவடைந்த தொகுதிகளுக்கு தொடர்ச்சியான தம்மேம்பாட்டு அதிகாரமளிப்பு நடவடிக்கைகளை வழங்குகின்றன.
மோதல்களால் பாதிப்புக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், மீள்குடியேற்றம், வீட்டுவசதி, இழப்பீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், வாழ்வாதாரங்களை ஆதரித்தல் மற்றும் தொழில்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
2025 ஜனவரி 01 அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் "க்ளீன் ஸ்ரீலங்கா" எனும் திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம், புதிய அரசியல் கலாச்சாரத்தையும் தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘தூய்மையான இலங்கை' திட்டமானது, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் மாற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டுவருவதற்கான சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக முயற்சிகளை இலக்காகக் கொண்டதொரு முழுமையான திட்டமாகும்.
மக்கள் வழங்கிய ஆணையின்படி, நமது நாட்டை நிலையான வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதில், தடைக்கல்லாகவும், பொருளாதாரச் சரிவின் மூலகாரணமாகவும் விளங்கிய தவறான முகாமைத்துவம் மற்றும் ஊழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபடுவதுடன், அரசாங்கமானது ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும். அனைத்து மட்டங்களிலும், அரசாங்க கட்டமைப்புகளில் டிஜிட்டல் மாற்றம் மூலம், வினைத்திறனின்மை மற்றும் ஊழல் குறைக்கப்படுவதை உறுதி செய்வோம் என நம்புகிறோம்.
தலைவர் அவர்களே,
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசானது, இனம், மதம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையிலான பிரிவினை அல்லது பாகுபாடு எதுவுமின்றி, அதன் மக்களின் பன்முகத்தன்மையை மதித்து கொண்டாடும் ஒரு ஐக்கிய இலங்கையை நோக்கி பாடுபடுவதில் உறுதியாகவும் உண்மையாகவும் செயற்படுவதற்கு உறுதிபூண்டுள்ளது. நமது நாட்டில் பிளவினை ஏற்படுத்தும் இனவெறி அல்லது மதத் தீவிரவாதம் மீண்டும் எழுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படை மற்றும் நீண்டகால கொள்கைகள் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, அனைத்து குடிமக்களினதும், மனித உரிமைகளையும் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனும் தனது மதத்தை பின்பற்றுவதற்கும், தனது மொழியைப் பேசுவதற்கும், தனது கலாச்சார விழுமியங்களின்படி வாழ்வதற்குமான சுதந்திரத்தை உணர வேண்டும். தனது நம்பிக்கைகள், கலாச்சாரம் அல்லது அரசியல் தொடர்புகள் தங்களை தேவையற்ற அழுத்தம் அல்லது தவறான எண்ணத்திற்கு ஆளாக்கும் என்று யாரும் நினைக்கக்கூடாது. இந்நோக்கில் நிர்வாக, அரசியல் மற்றும் தேர்தல் செயன்முறைகள் முறையாகச் செயற்படுத்தப்படும்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் முன்னேற்றுவதற்காக தீவிரமானதும், கட்புலனாவதுமான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சீராக்கப்பட்ட இலங்கைக்கான எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டிற்குமான பிரத்தியேகமான, இலங்கைத் தினத்தை அறிவிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். மோதலில் இருந்து எழும் சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு வழிமுறைகள் மற்றும் செயன்முறைகள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளை செவ்வனே செயற்படுத்துவதற்காக, மென்மேலும் பலப்படுத்தப்படும்.
உண்மை மற்றும் நல்லிணக்க கட்டமைப்பின் வரையறைகள், அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு செயன்முறையை உறுதி செய்வதற்காக, அவை முறையே செயற்படுத்தப்படுவதற்கு முன்பு, பரந்த அளவிலான பங்குதாரர்களுடன் மேலும் விரிவாக ஆலோசிக்கப்படும். உள்நாட்டு வழிமுறைகளை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும். இலங்கை சமூகத்திற்குள் பதட்டமிகு சூழ்நிலைகளை ஏற்படுத்தும் இனவெறி மற்றும் மதத் தீவிரவாதத்தால் ஏற்படும் வன்முறைச் செயல்களை விசாரிக்க அதிகாரம் பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நோக்கிய பணிகளை வலுப்படுத்துவதும் இதில் உள்ளடங்கும்.
நல்லிணக்கத்தை நோக்கி கடந்த சில மாதங்களில் நம்பிக்கையை வளர்க்கும் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 2024 நவம்பரில், பலாலி-அச்சுவேலி பிரதான சாலை உட்பட வடக்கு மாகாணத்தில் பல சாலைகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன. இவ்வாண்டு ஜனவரியில் வடக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, தமிழ் பேசும் இளைஞர்களை இலங்கையின் காவல் சேவையில் பங்கேற்க திறந்த அழைப்பு விடுத்தார். 2025 பாதீட்டில் நாடு முழுவதும் உள்ள நூலகங்களை மேம்படுத்த குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் முக்கியமாக தமிழ் சமூகத்திற்கு கல்வி மற்றும் அறிவொளியின் அடையாளமாக இருக்கும் வரலாற்று யாழ்ப்பாண நூலகமும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் உட்பட மக்களின் ஆணையுடன் சேர்த்து, நமது அனைத்து குடிமக்களுக்கும் ஒரு நீதியானதும், நியாயமானதும், வளமானதுமான சமூகத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் முழுமையாக அறிந்திருக்கிறது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மற்றும் சகல அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேறும்போது, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஊக்கமும், ஆதரவும் முக்கியமானதாக விளங்குகிறது.
தலைவர் அவர்களே,
இலங்கை 1955 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் தீவிர உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் பேரவையின் 09 முக்கிய மனித உரிமைகள் கருவிகளிலும் நாம் நாடொன்றாக விளங்குவதுடன், ஒப்பந்த அமைப்புகள் மற்றும் இப்பேரவையின் வழக்கமான வழிமுறைகளுடன் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயற்படுகிறோம். கடந்த சில ஆண்டுகளில், 10 க்கும் மேற்பட்ட சிறப்பு நடைமுறைகளைப் பெற்றுள்ளதுடன், மிகச்சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபட்டு ஒழிப்புக்குழு (CEDAW), சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மற்றும் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) போன்ற ஒப்பந்தங்களுடன் வினைத்திறனாக ஈடுபட்டுள்ளோம். தொடர்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் மனித உரிமைகள் குறித்த பயனுறுதிமிக்க பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
தலைவர் அவர்களே,
மோதல், சமத்துவமின்மை மற்றும் கடுமையான காலநிலை நிலைமைகள் தினமும் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளுகின்ற, அதே நேரத்தில் எண்ணற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உலகம் முழுவதும் போர் நிலைமைகளில் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் அல்லது இறக்கின்றனர். மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்காக நமது புவியைப் பாதுகாக்கவும் இந்த முக்கியமான சவால்களை பயனுறுதி மிக்கதாக எதிர்கொள்வது அவசியமாகிறது.
உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றின் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு ஏற்ப, சமச்சீரானதும், முழுமையானதுமான முறையில் அழுத்தம் விளைவிக்கும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இச்சபையை ஆதரிக்க இலங்கை தயாராக உள்ளது. வலுவான தேசிய மனித உரிமை கட்டமைப்புகள் மூலம், தங்கள் சவால்களை எதிர்கொள்ள நாடுகள் ஊக்குவிக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
மக்கள் தலைமையிலான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட தேசிய மாற்றத்தை நோக்கிய பாதையில் செல்லும் ஒரு நாடாகவும், சர்வதேச சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராகவும், இப்பேரவையினதும், நாட்டினதும், சட்ட கட்டமைப்புக்கிணங்க, இலங்கையானது, ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களுடன் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயற்படும்.
நன்றி.