
தலைவர் அவர்களே,
உயர் ஸ்தானிகர் அவர்களே,
மேதகு தலைவர்களே, பெண்களே, ஆடவர்களே,
எனது நாடு மாற்றத்தை நோக்கியதான, வரலாற்றுப் பயணமொன்றைத் தொடங்கியுள்ள இந்நேரத்தில், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நான் உங்கள் முன்னிலையில் உரையாற்றுகிறேன். இப்பயணம் ஜனநாயக நிர்வாகம், மனித உரிமைகள், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய ஒற்றுமை பற்றியது.
இவ்வாண்டு மார்ச் மாதம், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்று 3 மாதங்களுக்குப் பிறகு, இப்பேரவையின் உயர்மட்டப் பிரிவில் உரையாற்றி, அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் அர்த்தமுள்ள மற்றும் முற்போக்கான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் தெளிவான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டியிருந்தேன்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர், உயர் ஸ்தானிகர் இன்று இலங்கை குறித்த தனது அறிக்கையை முன்வைக்கிறார்; இந்த மாற்றத்தின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக மாற்றுவதில் நாம் அடைந்துள்ள உறுதியான முன்னேற்றத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தலைவர் அவர்களே,
2024 செப்டம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2024 நவம்பரில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்கள் நாட்டின் அனைத்து சமூகங்களின் மகத்தான ஆணையுடன் புதிய அரசாங்கத்தை நிறுவின. இலங்கை வரலாற்றில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் மக்கள் அரசியல் கட்சியொன்றிற்கு இத்தகைய ஆதரவை வழங்கியது இதுவே முதல் முறை.
இலங்கையின் வரலாற்றில், தற்போதைய பாராளுமன்றம், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்களையும், பிரதிநிதிகளையும் அதிக அளவில் கொண்டதும், அனைத்துத் தரப்பினரையும் மிகவும் உள்ளடக்கிய சட்டமன்றங்களில் ஒன்றானதுமாக விளங்குகிறது . முதல் முறையாக, மலையகச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், பார்வையற்ற ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்/நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதவியேற்ற சில மாதங்களுக்குள், பல ஆண்டுகளாக தாமதமாகி வந்த உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது; இதன் மூலம் மக்களின் வாக்குரிமையை மேலும் நிலைநிறுத்தியது. பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் இரண்டும் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டன; மேலும் முதல் முறையாக, தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக அரசு வளங்களை தவறாகப் பயன்படுத்துவது பூஜ்ஜியமாக இருந்ததமை - பல தசாப்தங்களாக நிலவிய அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் தெளிவான வெளிப்பாடாகும். எல்லை நிர்ணயச் செயன்முறை முடிந்ததும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் சுயாதீன தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும்.
தலைவர் அவர்களே,
11 மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பதவியேற்றபோது, இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடியின் பலவீனமான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தது. பொருளாதார நெருக்கடியின் விளைவுகளும் அதை நிவர்த்தி செய்வதற்காக செயற்படுத்தப்பட்ட நிதி நடவடிக்கைகளும் மக்கள்தொகையின் அனைத்துப் பிரிவுகளுக்கும், குறிப்பாக சமூகத்தின் மிகவும் ஏழ்மையான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கும் பெரும் துன்பங்களை ஏற்படுத்தின. எனவே, அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை, தொடர்ச்சியான சமூகப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் வலுவூட்டல் நடவடிக்கைகள் மூலம் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைத் தணிப்பதாகும்.
நாடு முழுவதும் விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரத் துறைகளுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்ட அதே நேரத்தில் 2025 தேசிய பாதீட்டில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. சமூக நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டதுடன், அனாதைகள், ஊனமுற்றோர் அல்லது மனவளம் குன்றிய குழந்தைகள் உள்ளிட்ட, பெண்கள், குழந்தைகள், தோட்டத் துறை மக்கள், மாணவர்கள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் நாட்டின் மோதலால் பாதிக்கப்பட்ட அல்லது வளர்ச்சி குன்றிய பகுதிகளில் வாழும் மக்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான வலுவூட்டல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், வாழ்வாதாரங்களை ஆதரித்தல் மற்றும் தொழிற்துறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகிறது; இது இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. மீள்குடியேற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், வீட்டுவசதித் திட்டத்தை விரைவுபடுத்துதல் மற்றும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றிற்காக ரூ.1,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று, பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்; மேலும் நியாயமான வாய்ப்புகளைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் பொருளாதார மாற்றம் மற்றும் அதிக பொருளாதார ஜனநாயகமயமாக்கலுக்கான அடித்தளத்தை அமைக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளோம். அதே நேரத்தில், நமது மக்கள் மீது பொருளாதார சவால்களின் தொடர்ச்சியான தாக்கத்தை நாங்கள் அறிவோம், மேலும் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தலைவர் அவர்களே,
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது நாட்டின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்ததாகும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் பங்களிப்புகளையும், நன்மைகளையும் வழங்குவதான சகலரையும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் தேசமொன்றாக ஒன்றிணைந்து, பிரிவினை, இனவாதம் மற்றும் ஊழலை வேரறுத்தல் மூலமாக மட்டுமே, பொருளாதார அபிவிருத்தி உட்பட நமது தேசிய அபிலாஷைகளை அடைய முடியும். இதைக் கருத்தில் கொண்டு, தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் அதே வேளையில், நெறிமுறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், 11 மாதங்களுக்குள் அரசாங்கம் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்களை ஏற்கனவே செயற்படுத்தியுள்ளது.
இதுவரை நாம் மேற்கொண்ட மாற்றத்திற்கான பயணத்தின் சில சிறப்பம்சங்களை உங்களுக்கு முன்வைக்க என்னை அனுமதியுங்கள்:
- கடந்த பல மாதங்களாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, அவர்களின் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், எந்த அரசியல் தலையீடும் இல்லாமல், அதிகாரிகளால் சுயாதீன விசாரணைகள் மற்றும் வழக்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் பல முக்கியமான குற்றத்தீர்ப்புகளுக்கு வழிவகுத்தன. இது ஊழல் பொறுத்துக்கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியை அளித்துள்ளது; இதன் மூலம் நமது நிறுவனங்கள் மீதான பொது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த தீர்க்கமான நடவடிக்கைகள் அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்க்கும் தகுதியான நீதி மற்றும் நியாயத்திற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. சவால்கள் இருந்தபோதிலும், ஊழல் இல்லாத இலங்கை ஒவ்வொரு குடிமகனின் நல்வாழ்விற்கும் கண்ணியத்திற்கும் இன்றியமையாதது என்று நாங்கள் நம்புவதால், எங்கள் உறுதிப்பாடு நிலையாக உள்ளது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தையும், தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும் ஊக்குவிக்கும் நோக்கில், தூய்மையான இலங்கைத் திட்டம் ஜனாதிபதியால் தொடங்கப்பட்டது. இந்நோக்கத்திற்காக அனைத்து அரசு நிறுவனங்களும் ஒருங்கிணைந்த செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதில் ஆர்வமாக ஈடுபடுகின்றன.
தலைவர் அவர்களே,
சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை கொண்டு வருவதற்கான பல செயன்முறைகளையும் நாங்கள் தொடங்கியுள்ளோம்.
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான திட்டங்களை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு உருவாக்கி வருகிறது. பொதுமக்களின் கருத்துக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன; மேலும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்த நுண்ணறிவுகளைப் பெற ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விவாதங்களின் அடிப்படையில், இந்த மாதம் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை திறம்பட நிவர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் ஒரு புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் மசோதாவைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.
- பல்வேறு பங்குதாரர்களால் எழுப்பப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, இணையத்தளப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வகுக்கப்படுகின்றன. சட்டத்தை சீர்திருத்துவதற்கான திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை வரவேற்கும் வகையில், ஊடக அறிவிப்புகள் தற்போது மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
- சிவில் சமூகத்திற்கான வெளி மற்றும் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்த, அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தை சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
- பெண்களின் உரிமைகளை மேலும் முன்னேற்றுவதற்காக திருத்தப்பட்ட வீட்டு வன்முறை மசோதா உள்ளிட்ட புதிய சட்டம் வரைவு செய்யப்பட்டு வருகிறது; அதே நேரத்தில் CEDAW இன் கீழ் இலங்கையின் உறுதிமொழிகளை செயற்படுத்த ஒரு வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகளை மேலும் முன்னேற்றுவதற்காக வரைவு சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் புதிய ஊனமுற்றோர் உரிமைகளின் மசோதா உரிமைகள் சார்ந்த அணுகுமுறையை அறிமுகப்படுத்தும். இப்பகுதியில் இலங்கையின் ஈடுபாடு, ஐக்கிய நாடுகளின் ஊனமுற்றோருக்கான உரிமைகள் குழுவின் தலைவராக நாங்கள் வழங்கும் தலைமையிலும் பிரதிபலிக்கிறது.
- வரலாற்றில் முதல்முறையாக, தற்போதைய அரசாங்கம் மலையகச் சமூகத்தை இலங்கையில் ஒரு தனித்துவமான சமூகமாக அங்கீகரித்துள்ளது; மேலும் இந்த அங்கீகாரத்தை முறைப்படுத்த தேவையான அரசாங்க செயன்முறைகளை நாங்கள் தற்போது பின்பற்றி வருகிறோம். தோட்டத் துறைத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதை எளிதாக்குவதற்கான சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்; அதே நேரத்தில் அச்சமூகத்தின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 5000 க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படவுமுள்ளன.
தலைவர் அவர்களே,
நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளார்; மேலும் இப்பேரவையுடனான எனது உரையாடலின் போதும் கூட அது உறுதியாகிறது.
பல சந்தர்ப்பங்களில் ஒடுக்குமுறை மற்றும் உரிமை மீறல்களுக்கு ஆளான அரசியல் இயக்கமொன்றாக, மனித உரிமைகளின் அடிப்படை முக்கியத்துவத்தை நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்; மேலும் அனைத்து தரப்பிலும் மோதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் மகத்தான வலி மற்றும் துன்பத்தை அடையாளம் காண்கிறோம்.
இது சம்பந்தமாக, 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த உடனேயே, ஐக்கிய நாடுகள் சபையானது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவுவதனை முன்னிலைப்படுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் எனது அரசியல் இயக்கம், இதுகுறித்த அழைப்பு விடுத்திருந்தமையை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தலைவர் அவர்களே,
எனவே, இவ்விடயத்தில் எமது உறுதிப்பாடு, மனித உரிமைகள் பேரவை அல்லது பிற மனித உரிமைகள் வழிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தால் மட்டுமே இயக்கப்படவில்லை. இது எங்கள் கொள்கைகள் மற்றும் அனுபவத்திலிருந்தும், எங்கள் சொந்த மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான தேவையிலிருந்தும் எழும் ஒரு உறுதிப்பாடாகும்.
ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியபடி, எந்தவொரு பிரிவினையோ அல்லது பாகுபாடோ இல்லாமல் அதன் மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் மற்றும் கொண்டாடும் நாடொன்றை நோக்கிச் செயற்பட நாங்கள் உறுதியாகவும், உண்மையாகவும் உறுதிபூண்டுள்ளோம்; மேலும் இனவாதம் அல்லது தீவிரவாதம் மீண்டும் எழுவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எந்தவொரு சட்டவிரோத செயலைச் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு நபரும், அவர்களின் சமூக நிலை, பின்னணி அல்லது வேறு எந்த காரணத்தையும் பொருட்படுத்தாமல், ஒரு சுயாதீனமான தேசிய செயன்முறை மூலம் விசாரிக்கப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றங்களுக்கு முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
இக்கொள்கையின்படி, சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், சட்ட மீறல்களை விசாரித்து வழக்குத் தொடர முன்முயற்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் நடக்கும் முன்னேற்றங்களைக் கவனிக்கும் நீங்கள் அனைவரும் இது தொடர்பாக பல உதாரணங்களைக் கண்டிருப்பீர்கள்.
அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளை சுருக்கமாக கோடிட்டுக் காட்ட எனக்கு அனுமதி தாருங்கள்:
- அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து குறுகிய காலத்தில், பல நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அவற்றில் பல தசாப்தங்களுக்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் சில சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறப்பது, தமிழ் பேசும் இளைஞர்களை இலங்கை காவற்துறையில் இணைத்துக்கொள்வதற்கு திறந்த அழைப்பு விடுப்பது ஆகியவை அடங்கும்.
- கடந்த வாரம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார், அங்கு அவர் பல அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கி, வடக்கு மக்களின் நிலம், மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் உண்மைக்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
- அரசாங்கம் உள்நாட்டு நல்லிணக்க வழிமுறைகளை - காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) ஆகியவற்றை அவர்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் மூலமும் தேவையான நிதி மற்றும் மனித வள ஒதுக்கீடுகளைச் செய்வதன் மூலமும் வலுப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, ஒரு வாரத்திற்கு முன்பு, காணாமல் போனோர் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, காணாமல் போனோர் அலுவலகத்திற்கு ரூ. 375 மில்லியன் மேலதிக நிதியை ஒதுக்க அமைச்சரவை முடிவு செய்தது; இது சிறப்பு முன்னுரிமையொன்றாகக் கருதப்பட்டது.
- உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை (TRC) நிறுவுவதற்கான செயன்முறை தொடங்கப்பட்டுள்ளது.
- செம்மணி உட்பட கல்லறைத் தளங்களில் எந்தவொரு அரசாங்க தலையீட்டிலிருந்தும் சுயாதீனமான விசாரணைகள் நீதித்துறை மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகின்றன. தொடர்புடைய செயன்முறைகளுக்கு அரசாங்கம் போதுமான ஆதாரங்களை வழங்கியுள்ளது மற்றும் தொடர்ந்தும் வழங்கும். இலங்கைக்கு விஜயம் செய்தபோது, உயர் ஸ்தானிகர் டர்க் செம்மணி மனித புதைகுழியைப் பார்வையிடவும், இது தொடர்பாக செயற்படுத்தப்பட்டுள்ள செயன்முறைகளை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.
- நம்பகமான உள்நாட்டு செயன்முறைகள் மூலம் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இலங்கை நீதிமன்றங்களின் சமீபத்திய தீர்ப்புகள் இலங்கை நீதித்துறையின் சுதந்திரத்தை நிரூபிக்கின்றன.
- நீதி வழங்கலை மேலும் மேம்படுத்த, ஒரு சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவ முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.
- அரசாங்கம் காவற்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது; மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உள்ளிட்ட பல நீண்டகால வழக்குகள் மீதான விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எந்தவொரு பொது அதிகாரியும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நாம் எவ்விதத் தயக்கமுமின்றி செயற்படுகிறோம்.
- இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் ஆதரவுடன் தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- பெரும்பாலான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன; மேலும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமானதாகக் கருதப்படும் நிலங்களைத் தவிர மற்ற அனைத்து நிலங்களும் சரியான உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்றும், விடுவிப்பு சாத்தியமில்லாத இடங்களில் போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. போட்டி உரிமைகோரல்களை நிவர்த்தி செய்வதற்கும், சர்ச்சைகள் இருக்கும் இடங்களில் உரிமையை நிறுவுவதற்கும் செயன்முறைகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம், காடுகள் மற்றும் பிற இருப்புக்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வசிக்கும் மோதலால் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட மக்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சரவை ஒரு குழுவை நியமித்தது.
இவ்விடயத்தில், உயரஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் உண்மையான நோக்கத்துடன் நல்லெண்ணத்துடன் வெளியிடப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். கவலைகள் குறித்து தெரிவிக்கப்பட்டவுடன், நீதிமன்றத்தீர்ப்பு வெளியிடப்பட முன்னரே அந்த வர்த்தமானி அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது.
- மோதலின் போது உயிர் இழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூரும் உரிமையானது, உரிமை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்த தவறாகப் பயன்படுத்தப்படாத பட்சத்தில் அதற்கான சுதந்திரத்தை வழங்கி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்தியுள்ளது; உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன.
- சிவில் சமூகம் சுதந்திரமாக செயற்பட உதவும் சூழலையும் இடத்தையும் உறுதி செய்வதில் நாங்கள் முழுமையான உறுதிப்பாட்டில் இருக்கிறோம், மேலும் கூறப்படும் எந்தவொரு துன்புறுத்தல் அல்லது மிரட்டல் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்.
- சீரமைக்கப்பட்ட இலங்கைக்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஜனாதிபதி அலுவலகம் 2025, டிசம்பர் முதல் வாரத்தில் 'இலங்கை தினத்தை' கொண்டாட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
- குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக முகத்தோற்ற அளவிலான வழக்கு இருந்தால் மட்டுமே சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய விரும்புவார்; மேலும் அறிக்கையில் சட்டமா அதிபர் அலுவலகத்தின் எதிர்மறையான சித்தரிப்பு நியாயமானதாக இல்லை. சட்டமா அதிபரின் வழக்குரைஞர் விருப்புரிமை ஒரு தடையற்ற அதிகாரம் அல்ல, மேலும் அது நீதித்துறை மீளாய்வின் முழு சக்திக்கும் உட்பட்டது.
- அறிக்கையில் திருத்தப்பட்ட தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் பற்றிய குறிப்பு தவறானது, ஏனெனில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டபடி விலக்குகளுடன் தொடர்புடையவை அல்ல.
தலைவர் அவர்களே,
சர்வதேச அளவில், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான மனித உரிமைகள் வழிமுறைகளுடன் நாங்கள் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளோம். மிக உயர்ந்த மட்டங்கள் உட்பட, இந்த ஈடுபாட்டின் மிகச் சமீபத்திய வெளிப்பாடாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2025, ஜூன் இல் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் அமைகிறது.
அவரது வருகையின் போது, இலங்கை சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் மாற்றத்தின் உண்மையான உந்துதலையும், நெறிமுறை நிர்வாகம், மனித உரிமைகள் மற்றும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளையும் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை உயர் ஸ்தானிகர் பெற்றார். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் உண்மையான திறந்த தன்மை மற்றும் ஊழலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உயர் ஸ்தானிகர் ஒப்புக்கொண்டதன் மூலம் நாங்கள் ஊக்கமடைந்தோம். இலங்கை அதன் பன்முகத்தன்மையை ஒரு பலமாக ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் அமைதியான சகவாழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாற முடியும் என்று உயர் ஸ்தானிகர் கூறினார்.
இன்று சமர்ப்பிக்கப்பட்ட உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் நாட்டில் நேர்மறையான முன்னேற்றங்கள் மற்றும் சில குறைகள் உள்ளன என்பதை நாங்கள் கவனிக்கிறோம். அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்த தனது கருத்துக்களை அரசாங்கம் வழங்கியுள்ளது; அவை ஏற்கனவே பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் தனது தற்போதைய அறிக்கையில், இலங்கைக்கு "மாற்றத்தக்க சீர்திருத்தங்களைச் செயல்படுத்த" ஒரு வாய்ப்பு இருப்பதாக அடையாளம் கண்டுள்ளார்.
11 மாத காலத்திற்குள், அரசாங்கம் தொடர்ச்சியான உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்; இது உயர் ஸ்தானிகரால் அடையாளம் காணப்பட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், நமது மக்களின் உரிமைகளை மேலும் முன்னேற்றவும் அதன் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் திறனை தெளிவாக நிரூபிக்கிறது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு, பேரவையுடனான நமது ஈடுபாட்டால் மட்டுமே இயக்கப்படவில்லை. மனித உரிமைகளின் அடிப்படை முக்கியத்துவம் மற்றும் நமது சொந்த மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான தேவை ஆகியவற்றில் நமது உண்மையான நம்பிக்கையிலிருந்து எழும் ஒரு உறுதிப்பாடாகும்.
தலைவர் அவர்களே,
மக்களிடமிருந்து இதுவரை பெற்றிராததொரு ஆணையுடன் வரும் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக அறிந்திருக்கிறது; மேலும் ஒரு நீதியான, நியாயமான மற்றும் வளமான சமூகத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது. வெளியக நடவடிக்கை பிளவுகளை உருவாக்க மட்டுமே உதவும் என்றும், இதன் மூலம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள உண்மையான மற்றும் உறுதியான தேசிய செயன்முறைகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் போன்ற எம்மீது சுமத்தப்படும் எந்தவொரு வெளியக பொறிமுறையையும் அரசாங்கம் எதிர்க்கிறது.
எனவே, தலைவர், மனித உரிமைக பேரவையின் உறுப்பினர்கள், அதன் பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது மனமார்ந்த கோரிக்கை என்னவென்றால், எங்கள் பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், இலங்கைக்கு உங்கள் ஆதரவை வழங்கவும், இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் கைகோர்க்க வேண்டும். தெளிவாகப் புலப்படும் எமது உண்மையாதும், நேர்மையானதுமான அணுகுமுறையானது, ஆழமான புரிதலுடனும் குறிப்பிடத்தக்க பாராட்டுடனும் பரிமாறப்பட வேண்டும். எமது சொந்த உள்நாட்டு செயன்முறைகள் மூலம் அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கான இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் நீங்கள் அனைவரும் எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.



