இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ எச்.எம். விஜித ஹேரத் அவர்களின் அறிக்கை ஆயுதக் குறைப்புக்கான மாநாட்டின் உயர் மட்டப் பிரிவு
2025 பெப்ரவரி 25
மேதகு சபைத்தலைவி அவர்களே,
மேதகு அரச தலைவர்களே,
மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,
முதன்முதலில், ஆயுதக் குறைப்பு மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜப்பானின் தூதுவரும், நிரந்தரப் பிரதிநிதியுமான, மேதகு இச்சிகாவா டோமிகோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆயுதக் குறைப்பு மாநாட்டின், வெற்றிக்கு எனது நாட்டின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நான் தங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான அடித்தளத்தை அமைத்ததற்காக, இவ்வாண்டிற்கான, ஆயுதக் குறைப்பு மாநாட்டின் முதல் தலைவரான இத்தாலிக்கும், நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2025 ஆம் ஆண்டிற்கான உள்வரும் தலைவர்களான, கஜகஸ்தான், கென்யா, மலேசியா மற்றும் மெக்சிகோவிற்கும், இலங்கையின் ஆதரவை மீண்டுமொருமுறை வலியுறுத்துவதுடன், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இவ்வாயுத ஒழிப்பிற்கான மாநாட்டில் நிலவிவந்துள்ள, ஸ்தம்பிதத் தன்மையைத் நீக்கி, அதன் பயனுறுதிமிக்க தொடர்ச்சியான பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக அவர்கள் வலிமை பெற வாழ்த்துகிறேன்.
மேதகு சபைத்தலைவி அவர்களே,
மனித வரலாற்றில், சர்வதேச மனிதாபிமான சட்டம் (IHL) கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள, ஒரு முக்கியமான தருவாயில் நாம் இருக்கிறோம். சந்தேகத்திற்கு இடமின்றி, இன்று நாம் மேற்கொள்ளும் வினைத்திறனான நடவடிக்கைகள் நாளைய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கும். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் போட்டி மற்றும் பல்தரப்பு அமைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவற்றின் பின்னணியில், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதற்காக பல்தரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.
மேதகு சபைத்தலைவி அவர்களே,
இலங்கையின் ஆயுதக் குறைப்பு மரபு, மனிதகுலத்தின் நலனுக்காக உலகளாவிய ஆயுதக் குறைப்பு நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை அடைவதில் நமது தொலைநோக்கு பார்வை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்கு ஒரு சான்றாகும்.
2023 ஆம் ஆண்டில் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் (TPNW) இலங்கை சமீபத்தில் இணைந்தமையும், 2023 ஆம் ஆண்டில் விரிவான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரித்தமையும், 1960 களில் இருந்தே அணு ஆயுதக் குறைப்புக்கான நமது நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவின் மேலதிக நிரூபணங்களாகும்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான முழுமையான ஒழிப்பு மற்றும் பரவல் தடை மட்டுமே உத்தரவாதங்களாக உள்ளன என்பதைக் குறிப்பிடுகையில், அணு ஆயுதங்கள் அல்லாத நாடுகள் நிபந்தனையற்ற, பாகுபாடற்ற மற்றும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட எதிர்மறை பாதுகாப்பு உத்தரவாதங்களை (NSAs) கொண்டிருக்க வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு, ஆயுதக் குறைப்பு மாநாட்டின் செயற்திட்டம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று இலங்கை வலியுறுத்துகிறது.
1964 ஆம் ஆண்டு கைரோவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் (NAM) உச்சி மாநாட்டில், உலகளாவிய "அணு ஆயுதமற்ற மண்டலங்களை" நிறுவுவதற்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பிரகடனத்திற்கு இலங்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதிலிருந்து, அணு ஆயுதமற்ற மண்டலங்களின் (NWFZs) முன்னோடி ஆதரவாளராகவும் இருந்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் அணு ஆயுதமற்ற மண்டலங்களை நிறுவுவதில், உறுதியானதொரு முன்னேற்றத்தைக் காண நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இலங்கை குறிப்பாக மனித பணியாளர் அற்ற கண்ணிவெடி தடை மாநாடு (APMBC) உட்பட, முக்கிய மனிதாபிமான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களின் தீவிர பங்காளியாகவும் உள்ளதுடன், இவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் குழுவின் தற்போதைய உறுப்பினராகவும், அதன் பாலின மையப் புள்ளியாகவும், 2019 இல் இலங்கை தலைமை வகித்த, ஆயுதக்கலங்கள் தொகுதி மாநாட்டிலும் (Cluster Munitions Convention) அங்கம் வகித்துள்ளது.
மேதகு சபைத்தலைவி அவர்களே,
இன்று, ஆயுத முறைமைகளில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியின் காரணமாக உலகளாவிய ஆயுதக் குறைப்பு கட்டமைப்பானது, முன்னொருபோதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் (IHL) கொள்கைகளைப் பாதுகாப்பது உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு மூளாதாரக்கல்லாகும் என்ற நமது நிலைப்பாட்டிற்கு இணங்க, ஆபத்தான தன்னாட்சி ஆயுத அமைப்புகளை (LAWS) தடை செய்வதற்கான சட்டப்பூர்வமாக பிணைக்கும் கருவி குறித்த பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே தொடங்குவதை இலங்கை வலுவாக ஆதரிக்கிறது. இக்கோணத்தில், 2023 ஆம் ஆண்டில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆபத்தான தன்னாட்சி ஆயுத அமைப்புகள் குறித்த முதலாவது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் (UNGA), முதல் குழுவின் தீர்மானத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது.
இதேபோல், வணிக மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இடையிலான வரையறையை தெளிவற்றதாக்கும், விண்வெளி தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால் விண்வெளியில் அமைதிக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து கவலையுடன் குறிப்பிட நேரிட்டாலும், விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதில் சட்டப்பூர்வமாக பிணைக்கும் கருவி குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது; மேலும் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுகிறது.
மேதகு சபைத்தலைவி அவர்களே,
ஒற்றைப் பன்முக ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தை மன்றமாக, ஆயுதக் குறைப்பு மாநாட்டின் ஆணையை இலங்கை நினைவுகூர்கிறது; மேலும் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதொரு உரையாடல், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல் மூலம், கணிசமான எதிர்மறையான விளைவுகளைத் தடுக்க ஏதுவாய் அமையும், தற்போதைய சவால்களை சமாளிக்க அனைத்து நாடுகளும் கூட்டாக உழைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது.
விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுக்க, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தன்னாட்சி ஆயுத அமைப்புகளால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்திற்கான ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி அணு ஆயுதங்கள் மற்றும் ஆயுதப்பரவல் தடையை அகற்றுவதற்கான உறுதிப்பாடுகளை மீண்டும் புதுப்பிப்பதற்கும், புதுப்பிக்கப்பட்ட உத்திகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் அழைப்புக்கு இணங்க, இகுறிக்கோள்களை அடையும்பொருட்டு, புதுப்பிக்கப்பட்ட பன்முகத்தன்மைக்கான அழைப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
மேதகு சபைத்தலைவி அவர்களே,
பிரிவினை மற்றும் தடுப்புக்கு எதிராக நின்று, ஆயுதக் குறைப்பு நிகழ்ச்சி நிரலின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது பகிரப்பட்ட பார்வையை வரையறுக்க ஒரே குரலில் பேச வேண்டிய நேரம் உதயமாகியுள்ள அதேவேளை, மனிதகுலத்திற்கான நமது கூட்டுப் பொறுப்பை மதிக்கிறது.
இறுதியாக, இந்த இலக்கை ஒரு விருப்பமாக மட்டுமல்லாமல், யதார்த்தமொன்றாகவும் மாற்ற இலங்கை அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நன்றி.