ஆசியான் பிராந்திய மன்றத்தின் 31வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சரின் உரை

ஆசியான் பிராந்திய மன்றத்தின் 31வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சரின் உரை

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஜூலை 27 ஆம் திகதி லாவோஸில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய மன்றத்தின் 31 ஆவது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் உரையாற்றிய போது, செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் உட்பட அதிகரித்து வரும் சவால்களை ஒருங்கிணைத்து, அவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஆசிய-பசுபிக் ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முயற்சிகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு, இணையம் மற்றும் வலையமைப்பு  பாதுகாப்பு முறைமைகளுக்கான சவால்களையும், சர்வதேச ரீதியிலான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சமாளிக்கவும் மன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வெளியுறவு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். இணைய மோசடி மையங்கள் மற்றும் பிராந்தியத்தின் சில பகுதிகளில் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

27 உறுப்பினர்கள் கலந்து கொண்ட, இவ்வாண்டிற்கான ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சரவைக்கூட்டமானது, தற்போது ஆசியான் மன்றத்தை தலைமை வகிக்கும் லாவோவின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சலியம்ஸே கொமாஸித் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேலும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஆசியான் நாடுகளுடனான இலங்கையின் வரலாற்று உறவுகளையும், பேரிடர் நிவாரணம், பரவல் தடை மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் நிகழ்ந்த  பல அமர்வுகளின் இணைத்தலைவராக அமைப்பின் பணிகளில் செலுத்திய ஈடுபாட்டின் பங்கையும் கோடிட்டுக் காட்டினார். ஆசியான் பிராந்திய மன்றமானது, காலநிலை நீதித் திட்டங்களுக்கு முன்னோடியாய் விளங்குவதுடன், பேரழிவு நிவாரணம் மற்றும் பதிலளித்தல் மற்றும் ஒத்துழைப்பிற்கான வலுவான பிராந்திய பொறிமுறைகளை நிறுவுதல் ஆகியவற்றை செவ்வனே மேற்கொள்வதைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல்களின் மனிதாபிமான தாக்கம் தொடர்பான இலங்கையின் கவலைகளை அமைச்சர் பாலசூரிய வெளிப்படுத்தியதுடன்,

பிராந்தியத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை எடுத்துரைத்தார். இராஜாங்க அமைச்சர் பாலசூரிய ஆசியான் பிராந்திய மன்றத்தின் பணிகளுக்கு இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதி கூறினார்.

இதன்போது, பிலிப்பைன்ஸ், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளை இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்.

2007 இல் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான இணக்கம் மற்றும் ஒத்துழைப்பிறகான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இலங்கை ஆசியான் பிராந்திய மன்றத்தில் இணைந்தது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூலை 29

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close