இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் 'பகிரப்பட்ட செழுமையை' அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஷங்க்ரி- ஹோட்டலில் இருந்து டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பப்பட்ட முதலீட்டு இலங்கை மன்றத்தின் இந்தியா சார்ந்த அமர்வில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ரப்பர், ஆடை மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில் துறைகளில் கவனம் செலுத்தி, சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு ஆர்வமுள்ள 6 முக்கிய துறைகளை தனது உரையின் போது இராஜாங்க அமைச்சர் எடுத்துரைத்தார்.
விஷேட பொருளாதார வலயங்கள் மூலமாக, குறிப்பாக சமீபத்தில் நிறுவப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத்தின் ஊடாக விஷேட நிதிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களை அவர் ஊக்குவித்தார்.
முதலீட்டு சபை, இலங்கை வணிக சபை மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'முதலீட்டு இலங்கை' யானது, 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 4500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஆசியாவின் முதலாவது மற்றும் மிகப்பெரிய மெய்நிகர் மன்றமாகும்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு
கொழும்பு
2021 ஜூன் 10