இலங்கையும் வெனிசுவேலாவும் நெருக்கமான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டன

இலங்கையும் வெனிசுவேலாவும் நெருக்கமான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டன

15-

 

 

பொலிவேரிய வெனிசுவேலா குடியரசுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஓசியானியாவிற்கான வெனிசுவேலா வெளிவிவகார துணை அமைச்சர் ரூபன் டாரியோ மொலினா 2019 ஆகஸ்ட் 24 முதல் 28 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

 

வெனிசுவேலா அமைச்சர் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவுடன் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடாத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

கட்டமைக்கப்பட்ட உரையாடலை செயற்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை முறைப்படுத்துவதற்கான வரைவு ஒப்பந்தம் ஒன்று குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடினர். மேலும், இலங்கை மற்றும் வெனிசுவேலாவிற்கு இடையிலான உத்தியோகபூர்வ விஜயங்களை எளிதாக்கும் நோக்கில், இராஜதந்திர மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு வழங்குவது குறித்த வரைவு ஒப்பந்தமொன்றும் இலங்கைத் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தை நோக்கிய தனது அதிகரித்த கவனத்தை இலங்கை வலியுறுத்தியதுடன், இரு நாடுகளும் தங்களது வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பையும், அத்துடன் மக்கள் தொடர்புகளையும் புதுப்பிப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் ஒரு வீதி வரைபடத்தை நோக்கி தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வாழ்த்துக்களை இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க பொலிவேரிய வெனிசுவேலா குடியரசின் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் தெரிவித்தார். வெனிசுவேலா தற்போதைய அணிசேரா இயக்கத்தின் தலைமையாக உள்ளதுடன், அதில் இலங்கை ஒரு ஸ்தாபக உறுப்பினராக உள்ளது.

 

இந்த சந்திப்பின் போது, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் சேனநாயக்கவுடன் இணைந்திருந்தனர். துணை அமைச்சர் மொலினாவுடன், இலங்கைக்கு தற்போது சான்றளிக்கப்பட்டுள்ள புது டில்லியிலுள்ள வெனிசுவேலா தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் திரு. நெஸ்டர் என்ரிக் லோபஸும் இணைந்திருந்தார்.

 

 

  

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
28 ஆகஸ்ட் 2019

12-

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close