வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மாரில் மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட 20 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு திருப்பி அனுப்பியுள்ளது. அவர்கள், 2024 செப்டம்பர் 05 ஆம் திகதி பாதுகாப்பாக கொழும்பை வந்தடைந்தனர்.
அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளைத் அடுத்து, மியன்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளின் நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், இந்த இலங்கையர்கள், 2024 ஆகஸ்ட் 14 அன்று மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், மீட்கப்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பான தங்குமிட வசதி மற்றும் அவர்கள் தங்கியிருக்குக்கும் காலப்பகுதியில் அவர்களின் நலனை உறுதிசெய்யும்பொருட்டு, அவர்களை மியன்மாருக்கு அருகிலுள்ள தாய்லாந்தின் எல்லை நகரமான மே சோட்டில், 2024 ஆகஸ்ட் 15 அன்று சந்தித்தனர். தாய்லாந்து அரசானது, பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மீளனுப்பப்படுவதற்கான நடைமுறைகள் முடியும வரையான காலப்பகுதிக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) விமானச் சீட்டுக்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கியதன் மூலம் அவர்கள் நாடு திரும்புவத ஒத்துழைத்தது. தூதரக விவகாரப் பிரிவின் பணிப்பாளர் திரு.காஞ்சன பண்டார அவர்கள் 20 பேர் கொண்ட இலங்கையர்களை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2024, செப்டம்பர் 05 அன்று வரவேற்றார்.
அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவானது, யாங்கூன் மற்றும் பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து, இலங்கையர்களை மீட்டு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தது.
மியன்மாரின் மியாவாடி பகுதியில் 35 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவாக மீட்டு, திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய, உரிய அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் வேலை தேடும் போது மனித கடத்தல் கும்பல்களுக்கு பலியாக வேண்டாம் என்று அமைச்சு பொதுமக்களை கடுமையாக வலியுறுத்துகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், அங்கீகரிக்கப்படாத வழிகளைத் தவிர்க்குமாறும் இலங்கையர்களுக்கு அமைச்சு அறிவுறுத்துகிறது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 செப்டம்பர் 09