
பஹ்ரைன் இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், லுலு உயர் தரச்சந்தையுடன் இணைந்து, வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், “Sri Lanka Fest” என்ற தலைப்பில், 2023 செப்டம்பர் 07-13 வரை, ஒரு வார காலபகுதியில், பஹ்ரைன் பிரஜைகள் மற்றும் பஹ்ரைனில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மத்தியில் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுடன், நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதற்காக இலங்கை உற்பத்திகள் மற்றும் உணவு வகைகளுக்கான சந்தையை ஏற்பாடு செய்தது. பஹ்ரைனில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் உட்பட 2000க்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாலாளர்களை இந்நிகழ்ச்சி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹ்ரைனுக்கான இலங்கைத் தூதுவர் எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. விஜேரத்ன மெண்டிஸ் இந்த வண்ணமயமான நிகழ்வை, 2023 செப்டம்பர் 07 அன்று, பஹ்ரைன் இராச்சியத்தின், வெளிநாடு அலுவல்கள் அமைச்சின் தூதரக மற்றும் நிர்வாக அலுவல்களுக்கான துணைச் செயலாளர், கலாநிதி முகமது அலி பஹ்சாத் இடையேற்பு, பஹ்ரைன் வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (BCCI) தலைமை நிர்வாக அதிகாரி முகமது அதெஃப் அல் காஜா, தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (LMRA) தலைமை நிர்வாக அதிகாரி நிப்ராஸ் முகமது தாலிப் மற்றும் லுலு குழுமத்தின் பிராந்திய இயக்குநர் முகமது கலீம் ஆகியோருடன் இணைந்து, இவ்விழாவை ஆரம்பித்து வைத்தார். இத்தொடக்க விழாவில் பஹ்ரைனுக்கான சீனா, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் பஹ்ரைனில் உள்ள இராஜதந்திரகுழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த ஆண்டு நிகழ்வில், சூரை கிங்ஃபிஷ் மற்றும் இறால் உள்ளிட்ட கடல் உணவுகள், மிளகு, மசாலாப் பொருட்கள், பல்வேறு வகையான விசுக்கோத்துக்கள், மற்றும் தின்பண்டங்கள் போன்ற புதிய தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன. தேங்காய் கிரீம், தேங்காய் பால் மற்றும் குளிரூட்டி அழுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கலப்படமற்ற இயற்கையான தேங்காய் தயாரிப்புகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைத்தன. இலங்கையைச் சுற்றியுள்ள நன்கு அறியப்பட்ட தோட்டங்களில் இருந்து மஞ்சள், கெமோமைல் மற்றும் பிற மூலிகைகள் கொண்ட சிலோன் தேயிலை மற்றும் தேயிலை அடிப்படையிலான மூலிகை கலந்த உற்பத்திகளும் ஊக்குவிக்கப்பட்டன.
கித்துல் வெல்லம், தின்பண்டங்கள், மசாலா பொருட்கள், பனைவெல்ல உற்பத்திகள், கைவினைப் பொருட்கள், கைத்தறி, பத்திக் ஆடை உற்பத்திகள் மற்றும் பல்வேறு சூழல் நட்பு பொருட்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் இலங்கை தொழில் முயற்சியாளர்களால் அமைக்கப்பட்ட பொருட் காட்சிக்கூடாரங்களும் “ஸ்ரீலங்கா திருவிழா”வில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த மற்ற இடங்களாகும். Dilmah ஏற்பாடு செய்திருந்த சிலோன் தேநீர் விற்பனையகம், பார்வையாளர்களுக்கு இலங்கை தேநீரை ருசிப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியதுடன், அக்பர் ஹோலிடேஸ் வெளிநாட்டு சுற்றுலா பயணச்சீட்டு முகவர் நிறுவனமானது, கவர்ச்சிகரமான இலங்கைக்கான சுற்றுலா சலுகைகளை வழங்கியது. பெரிய தொலைக்காட்சித் திரைகள், இலங்கையின் சுற்றுலாத் தளங்கள், சிலோன் தேயிலை, இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் போன்ற பல முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய காணொளிகளைக் காட்சிப்படுத்தியது.
இந்நிகழ்வை ஒரு தளமாகப் பயன்படுத்தி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து இலங்கை தூதரகமானது, வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும் NVQ சான்றிதழின் ஊடாக திறன்களுக்கான அங்கீகாரத்தை ஊக்குவிப்பதற்கும் கூடாரமொன்றை ஏற்பாடு செய்தது. தூதரகத்தின் இம்முன்முயற்சியின் நோக்கம், பஹ்ரைனில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் திறன்கள் மற்றும் தகுதிகள் பற்றிய தரவு மற்றும் தகவல்களைச் சேகரித்தலும், தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படும் "முன் கற்றல் அங்கீகாரம் (RPL)" க்கு பதிவு செய்ய அவர்களுக்கு உதவுவதுமாகும்.
இலங்கையின் துடிப்பான கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில், இலங்கை நடனக் கழகக்குழு மற்றும் "திரங்க கலா - பஹ்ரைன்" ஆகியவற்றின் உறுப்பினர்களால், நடன நிகழ்ச்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது, இது பார்வையாளர்களிடமிருந்து பரவலான கரகோஷத்தையும் பாராட்டையும் பெற்றது. 2023 செப்டம்பர் 08 மற்றும் 09, ஆகிய தேதிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வை மேலும் மெருகேற்றும் வகையில், பஹ்ரைனை தளமாகக் கொண்ட இலங்கை உணவகமான "சாய்னா"வைச் சேர்ந்த செஃப் உதய குமார, தனித்துவமிக்க இலங்கைக்கான உணவு வகைகளை தயாரிப்பது குறித்து, செயற்பாட்டு ரீதியிலான விளக்கமளித்தார்.
இலங்கைத் தூதரகமானது, பொருளாதார இராஜதந்திர முன்னெடுப்பின் கீழ், பஹ்ரைனில் வர்த்தகம், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை சுற்றுலாத்துறை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகார சபைகளின் ஒருங்கிணைப்புடன் இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுத்தொகுப்பில், "இலங்கை விழா" ஒரு பகுதியாகும்.
இலங்கைத் தூதரகம்
மனாமா
11 செப்டம்பர் 2023





