குவைத் பாராளுமன்றத்தின் சபாநாயகருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

குவைத் பாராளுமன்றத்தின் சபாநாயகருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

குவைத் அரசிற்கான இலங்கைத் தூதுவர் யு.எல். மொஹமட் ஜௌஹர், இந்த ஆண்டு  செப்டம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நான்காவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் அஹ்மட் அப்துல் அஜீஸ் அல்-சதூனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, குவைத் தேசிய சபைக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும்   இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு சபாநாயகரின் உதவியை தூதுவர் கோரினார். சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக வாழ்த்துகளைத் தெரிவித்த தூதுவர், சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இலங்கையின் சட்டமன்றங்கள் குறித்து சுருக்கமாக விவரித்தார். குவைத் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயங்களை அவர் நினைவு கூர்ந்தார்.

சபாநாயகர் அல்-சதூன் தூதுவருக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கை தொடர்பான   குவைத் பாராளுமன்ற நட்புறவுக் குழு விரைவில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அவ்வாறான குழுவை உருவாக்குவதும், இரு நாட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் வருகைப் பரிமாற்றமும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். குவைத் நாட்டின் பொருளாதாரத்திற்கு இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை சபாநாயகர் பாராட்டினார். 1975ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்தமையை அவர் அன்புடன் நினைவு கூர்ந்தார்.

 

இலங்கைத் தூதரகம்,

குவைத்

2022 டிசம்பர் 23

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close