தற்போது தமது நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் மற்றும் கோவிட் - 19 மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பயணத் தடைகளின் காரணமாக இலங்கைக்கு நாடு திரும்புவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு வீசாக்களை நீடிப்பதற்காக வசதிகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க வெளிநாட்டு அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்தார். தற்போது நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து வகையான வீசாக்களையும் அவர்களது தற்போதைய வீசாக்கள் காலாவதியாகும் திகதியிலிருந்து ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பரஸ்பர ஏற்பாடுகள் ஒரு பொதுவான நடைமுறையாவதுடன், இந்த விதிவிலக்கான காலப்பகுதியில் பயணங்களை மேற்கொள்பவர்கள் எதிர்கொள்ளும் பதற்றங்களைக் குறைப்பதற்கு இலங்கையர்களுக்கு இது வசதிகளை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட் - 19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்குத் தெரியப்படுத்துவதற்கான தொடர் மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்ற மேற்குலகைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவில் உரையாற்றியபோது, இந்த அவதானிப்புகளை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க இன்று (மார்ச் 18) மேற்கொண்டார்.
இலங்கை சமூகங்களுக்கு தமது நாடுகளில் உதவுவதில் அந்தந்த அரசாங்கங்கள் ஆற்றிய ஆதரவைப் பாராட்டிய அதே வேளை, இலங்கையில் உள்ள வெளிநாட்டினரின் தற்போதைய நிலை குறித்தும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுபவிக்கும் சில சிரமங்கள் குறித்தும் வெளிவிவகார செயலாளர் தூதுவர்களுடன் பகிர்ந்து கொண்டார். தற்போதுள்ள நிலைமைகளை அங்கீகரித்து, இலங்கையின் அனைத்து இராஜதந்திர நிலையங்களும் தற்போது அவசரகால பிரதிபலிப்பு அலகுகளாக செயற்படுவதுடன், தற்போதைய சவால்களுக்கு மத்தியில் அவை மட்டுப்படுத்தப்பட்ட கொன்சியூலர் மற்றும் ஏனைய சேவைகளை மட்டுமே தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன என அவர் தெரிவித்தார்.
தமது பிரஜைகள் தொடர்பான கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் கரிசனைகள், தனிமைப்படுத்தல் மையங்களிலுள்ள வசதிகள் மற்றும் சரியான தொடர்பு முறைமைகள் ஆகியவற்றுக்கு உள்நாட்டுப் பங்குதாரர்களால் திறம்பட பதிலளிக்கப்பட்டது. இலங்கைக்குள் நுழைய விரும்புவோருக்கு விமான நிலையம் மூடப்பட்டிருப்பினும் கூட, வெளிநாட்டவர்களை சீராக வெளியேற்றுவது குறித்தும் இந்த சந்திப்பின் போது ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
தமது பிரஜைகளுக்கான வீசாக்களை நீடிப்பது உள்ளிட்ட நிலைமைகளைக் கையாள்வதிலான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தூதுவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், தமது நாடுகளில் பிரயாணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்களும் பரஸ்பரம் அதனை மறுபரிசீலனை செய்து கொள்வதற்கான கோரிக்கையை அந்தந்த அரசாங்கங்களுக்குத் தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.

