2023 ஏப்ரல் 26ஆந் திகதி தற்போதைய வடமேல் மாகாண ஆளுநரான வசந்த கரன்னாகொட மீது தடை விதிப்பதற்காக அமெரிக்கா எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை வருத்தம் தெரிவிக்கின்றது.
இந்தத் தீர்மானத்துடன் தொடர்புடைய இலங்கையின் பாரதூரமான கவலைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2023 ஏப்ரல் 27ஆந் திகதி அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிடம் தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால இருதரப்பு பங்குதாரர் என்ற வகையில், அமெரிக்கா உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒருதலைப்பட்சமாக செயற்படுவது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகும். நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிஷ்டவசமானது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை தொடந்தும் மேற்கொள்ளும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2023 ஏப்ரல் 27