மியன்மார் துணைப் பிரதமரும், மத்திய வெளியுறவு அமைச்சருமான யூ தான் ஸ்வேயுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று தொலைபேசியில் உரையாடினார். மியன்மாரின், இச்சவால் மிகுந்த சூழ்நிலையில் இலங்கையின் ஆதரவை மீண்டும் வலியுறுத்திய அவர், இது தொடர்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
இவ்வுரையாடலின் போது, அமைச்சர் ஹேரத், மியன்மாரின் பூகம்ப அனர்த்த மீட்புப் பணிகளுக்கு, இலங்கை அரசு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்தார். அனர்த்தத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு உதவ இலங்கை ஆயுதப் படைகளின் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதுடன், பேரிடர் நிவாரண (HADR) குழுவை அனுப்பவும், அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கவும் அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இன்று பாங்கொக்கில், 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது அமைச்சர் யூ தான் ஸ்வேயை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஏப்ரல் 02