இலங்கை குறித்த குறிப்பொன்றை உள்ளடக்கிய வகையில், கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது கருத்துச் சுதந்திரத்தை 'கட்டுப்படுத்துதல்' தொடர்பாக 2020 ஜூன் 03 ஆந் திகதி உயர் ஸ்தானிகர் வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த கவலைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்சலெட் அவர்களுக்கு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தரப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் எழுதிய கடிதத்தில் எழுப்பியுள்ளார்.
குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நலன்களில் தவறான மற்றும் முரணான தகவல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும், அரசாங்கங்களும் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், 2020 மே 18 ஆந் திகதி இடம்பெற்ற 73வது உலக சுகாதார சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவிட்-19 தொடர்பான பிரதிபலிப்புக்களுக்கான ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவானவையாக இருப்பதுடன், மக்களிடம் கோவிட்-19 தொடர்பான நம்பகமான மற்றும் விரிவான தகவல்களை வழங்குமாறும், தவறான மற்றும் முரணான தகவல்களை எதிர்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைகின்றது.
2020 ஏப்ரல் 01 ஆந் திகதி இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பிறப்பித்த உள்ளக உத்தரவின் உள்ளடக்கத்தைத் தெளிவுபடுத்தும் முகமாக, குறித்த உத்தரவு 'சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறுதல், அரச ஊழியர் ஒருவர் தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுத்தல், அரச ஊழியர் ஒருவரை தவறான முறையில் கட்டுப்படுத்துதல், அரச ஊழியர் ஒருவர் தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்கும் முகமாக குற்றவியல் முறைமைகளைப் பயன்படுத்துதல், தனிமைப்படுத்தல் கட்டளையை மீறுதல் மற்றும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுச் சட்டம், ஒழுங்கு மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுதல் போன்ற காரணிகளைத் தவிர, வெறும் விமர்சனங்களுக்காகவோ அல்லது போலி அல்லது தீங்கிழைக்கும் செய்திகளைப் பகிர்வதற்காகவோ நபர்களைக் கைது செய்வதற்கான வழிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்வதோடு தொடர்புடைய பல சவால்களுக்கு மத்தியில், பல மாதங்களாக கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பேணும் பணிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'உலக சுகாதாரத் தாபனத்தினால் பாராட்டப்பட்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் வெற்றியானது, இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைப் பாதுகாப்பதற்கும் உதவியது. பெரும்பாலும் அனைத்துத் தரப்பினரும் தேசியப் பிரதிபலிப்புக்களுடன் ஒத்துழைத்ததன் காரணமாகவும், துல்லியமான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கியதன் விளைவாகவுமே இது சாத்தியமானதாக அமைந்தது' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இந்த தொற்றுநோய் நிலைமையின் போது, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் நலன்களுக்காக, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதிக்கும் அல்லது பாதிப்புக்களை தோற்றுவிக்கக்கூடிய பொய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், உரிய சட்டங்களுக்கு இயைபாக இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது' என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பாதுகாத்து, மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், நாடுகள் எதிர்கொண்டு வருகின்ற முன்னனுபவங்கள் எதுவுமற்ற இத்தகைய சவால்கள் தொடர்பில் உணர்வுபூர்மாக செயற்படுமாறும், ஒத்துழைப்பு மனப்பாண்மையில் ஈடுபடுமாறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திடம் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முழுமையான கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.