அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை - அமைச்சர்கள் மட்ட 3வது மாநாட்டில், பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் குறித்து அரசுகளிடையே மேலும் சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதிக அரசியல் விருப்பத்தை வலுப்படுத்துவதற்கும் உதவும் நோக்கில் புகழ்பெற்ற நபர்களின் குழுவை அமைப்பதற்குஇலங்கை முன்மொழிந்தது.
அமைச்சர்கள் மட்ட மாநாட்டிற்கான இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சனிக்கிழமை (19) மாநாட்டில் வெளியிட்ட தனது அறிக்கையிலேயே இந்த யோசனையை முன்வைத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான நிதியுதவி குறித்த பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை - அமைச்சர்கள் மட்ட 3வது மாநாடு 18-19 நவம்பர் 2022 வரை புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தால் நடாத்தப்பட்டது.
இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் தொண்ணூற்று மூன்று நாடுகள் மற்றும் பலதரப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவியில் உலகளாவிய போக்குகள், பயங்கரவாதத்திற்கான முறையான மற்றும் முறைசாரா நிதிகளின் பயன்பாடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயங்கரவாத நிதியுதவி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து மாநாட்டில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் அறிக்கையை வழங்கிய உயர்ஸ்தானிகர் மொரகொட மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக எதிர்கொள்ளும் பன்முக சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒத்துழைப்பில் உறுப்பு நாடுகளின் அரசியல் விருப்பம் மிக முக்கியமான அங்கமாகும். 'பயங்கரவாதத்திற்குப் பணம் இல்லை' என்ற மாநாட்டின் நோக்கம், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து சர்வதேச சமூகத்தை உணர்த்துவது பாராட்டுக்குரியது என்றாலும், மாநாட்டின் பணிகளைத் தொடர ஒரு வழிமுறை இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழலில், தற்போதைய மாநாட்டின் தலைவராக, இந்தியா, உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த நபர்களின் குழுவை உருவாக்கி, அதிக அரசியல் விருப்பத்தை வலுப்படுத்த உதவும் நோக்கத்துடன், பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் குறித்து அரசுகளுக்கு மேலும் சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உயர்ஸ்தானிகர் மொரகொட முன்மொழிந்தார்.
2018 இல் பரிஸிலும் 2019 இல் மெல்போர்னிலும் முறையே 1வது மற்றும் 2வது 'பயங்கரவாதத்திற்குப் பணம் இல்லை' அமைச்சர்கள் மட்ட மாநாடுகள் நடைபெற்றன. 3வது 'பயங்கரவாதத்திற்குப் பணம் இல்லை' மாநாடு, முதல் இரண்டு மாநாடுகளில் தொடங்கப்பட்ட கூட்டு ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முற்போக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுடில்லி
2022 நவம்பர் 21