2024 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் 26 ஆம் திகதி வரை சமோவாவின் ஏபியாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) இலங்கை பங்கேற்றது. 2024 இற்கான பொதுநலவாய அரச தலைவர்களுக்கான சந்திப்பின் கருப்பொருள் "நெகிழ்வானதொரு பொது எதிர்காலம்: நமது பொதுநலனில் அனுகூலமானதொரு மாற்றம்" என்பதாகும். 56 சுதந்திர நாடுகளை உள்ளடக்கிய தன்னார்வ அமைப்பொன்றான பொதுநலவாய அமைப்பானது, 56 சுதந்திர நாடுகளின் தன்னார்வ ரீதியிலான அமைதி, ஜனநாயகம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும் மாநிலங்களின் உலகின் பழமையான அரசியல் சங்கங்களில் ஒன்றாகும். இவ்வமைப்பு ஏறக்குறைய 2.7 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளதுடன் அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளாகிய இருவகைப் பொருளாதாரங்களையும் உள்ளடக்கியது.
பொதுநலவாயத் தலைவர்களின் அதிகாரபூர்வ அறிக்கை, சமோவா பொதுநலவாய அரச தலைவர்களுக்கான சந்திப்பு-2024 இற்கான பிரகடனம் மற்றும் ஏபியா பெருங்கடல் பிரகடனம் ஆகியவை பொதுநலவாய அரச தலைவர்களுக்கான சந்திப்பு- 2024 இன் போது ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், இத்தலைவர்கள் கானாவின் வெளிவிவகார மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சராகிய கௌரவ ஷர்லி அயோகோர் போட்ச்வே அவர்களை, பொதுநலவாய நாடுகள் சங்கத்தின் செயலாளர் நாயகமாகத் தெரிவுசெய்தனர்.
2024 இற்கான பொதுநலவாய அரச தலைவர்களுக்கான சந்திப்பில், இலங்கையிலிருந்து பங்குபற்றிய இரண்டு பேர் கொண்ட தூதுக்குழுவிற்கு லண்டனில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி மனோரி மல்லிகாரச்சி தலைமை தாங்கியதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் திரு.சதுர பெரேராவும் அவருடன் இணைந்துகொண்டார்.
2024, ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாயத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். திருமதி மல்லிகாராட்சி சமோவாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. பெசெட்டா நௌமியா சிமி அவர்களைச் சந்தித்து, சமோவாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களுக்கான சந்திப்பு- 2024 குறித்து, அதிமேதகு ஜனாதிபதியின் வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் தெரிவித்தார். அவர் பொதுநலவாய அமைப்பின் தற்போதைய செயலாளர் நாயகமான மேதகு பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் கேஸீ ஐச் சந்தித்து, இலங்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவருக்குத் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 அக்டோபர் 26