சீனா - இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சங்கம் மற்றும் டூயின் (டிக்டொக்) சமூக ஊடகத் தளத்துடன் இணைந்து பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 ஆகஸ்ட் 30ஆந் திகதி இலங்கை தேசிய கூடாரத்தை அறிமுகப்படுத்தியது. கண்டி எசல பெரஹெர மற்றும் இலங்கைக் கலாச்சாரம் மற்றும் உணவு தொடர்பான தூதரகத்தின் கொண்டாட்டத்தின் போது இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அனைத்து வசீகரத்துடனும், வரலாற்றுப் பெருமையுடனும், டூயின் மூலம் சீன பார்வையாளர்களுக்கு கண்டி எசல பெரஹெர வழங்கப்பட்டது. 600 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட (டிக்டொக்கில் உலகளவில் 2 பில்லியன்) டூயின் மூலம் இலங்கைத் தயாரிப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன.
டூயினில் உள்ள புதிய இலங்கை தேசிய கூடாரம் இணையவழியில் உடனடியாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்ததுடன், 27,000 க்கும் மேற்பட்ட புதிய பின்தொடர்பவர்களைச் சேர்த்தது. ஐந்து மணி நேர நேரடி ஒளிபரப்பின் போது, 16,000 க்கும் மேற்பட்ட இலங்கைத் தயாரிப்புகள் இணைய வழியில் கொள்வனவு செய்யப்பட்டதுடன், இது மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
தெரிவு செய்யப்பட்ட பார்வையாளர்களிடம் உரையாற்றிய சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சீன நுகர்வோர் இலங்கைப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்களைத் திறக்கும் அதே வேளையில் சீனாவில் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் தேசிய கூடாரம் உதவும் என்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தூதுவர் கொஹொன ஒரு கோப்பை சிலோன் பிளக் டீ, 'ஹொங் சா' மற்றும் காரமான இலங்கை நண்டு உணவை தயாரிக்கும் முறையை செய்து காட்டினார். நண்டுகள் மற்றும் ஏனைய கடல் உணவுகள் சீனாவில் மிகவும் பிரபலமாக உள்ளன.
டூயினைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட முக்கிய கருத்துத் தலைவர்கள் பங்கேற்று, நிகழ்விற்கு கவர்ச்சியை சேர்த்ததுடன், இது நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. கொழும்பு, சிகிரியா, காலி, மாத்தளை, கண்டி, பல்லக்கு ஆலயம் மற்றும் பெரஹெர, யால, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்கள் இலங்கையின் பெரிய வரைபடத்தில் தூதுவரால் முன்னிலைப்படுத்தப்பட்டன. மேலும் இந்த நகரங்களின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவற்றின் கலாச்சாரப் பின்னணியை விளக்கினார்.
ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்து எசல பெரஹெர பற்றி விரிவாக எழுதிய சீன பௌத்த பிக்கு பாக்சியாவை மையமாக வைத்து கண்டி பெரஹெரவின் வரலாற்று முக்கியத்துவத்தை தூதுவர் விளக்கினார். சிறப்பான வகையில் கண்டி பெரஹரவைக் காண இலங்கைக்கு வருகை தருமாறு அவர் சீன மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அழைக்கப்பட்டவர்களுக்கு தூதுவரின் நண்டு உணவு உட்பட இலங்கையின் பாரம்பரிய இரவு உணவு வழங்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்
2022 செப்டம்பர் 02