இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழுவின் உயர்ஸ்தானிகர் மொரகொடவுடனான சந்திப்பு

இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழுவின் உயர்ஸ்தானிகர் மொரகொடவுடனான சந்திப்பு

இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (SLNDC) தூதுக்குழுவினர், இந்தியாவுக்கான தனது முதல் சர்வதேச கூட்டாய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள வேளையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை 2023 செப்டம்பர்14 அன்று, புது டில்லியில் சந்தித்து மரியாதை செலுத்தினர்.

மரியாதை நிமித்தமான சந்திப்பைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் மொரகொட தூதுக்குழுவின் உறுப்பினர்களுடன் உரையாடியதுடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் தற்போதைய நிலை குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, எதிர்கால இருதரப்புக்கூட்டுறவானது, எவ்வாறு இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும் என்பதை விளக்கினார். சமீப காலங்களில், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை விளக்கிய அவர், இரு நாடுகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில முயற்சிகளை செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டினார்.

இந்தியா மற்றும் இந்து சமுத்திர இயக்கவியல் தொடர்பில், குறிப்பாக SLNDC கற்கைநெறியை மேற்கொள்ளும், மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் புரிதலின் முக்கியத்துவம் உயர்ஸ்தானிகரால் வலியுறுத்தப்பட்டது. மூலோபாய உள்ளீடுகள் மூலம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு படைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய உயர்ஸ்தானிகர் மொரகொட, எதிர்காலத்தில் திறமைமிக்க இலங்கை இராணுவத் தலைவர்களை வடிவமைப்பதன் மூலம் SLNDC வகிக்கும் முக்கிய பங்கையும் குறிப்பிட்டார்.

அண்மையில் இடம்பெற்ற, இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பெறுபேறுகள் குறித்து விளக்கமளித்த உயர்ஸ்தானிகர் மொரகொட, எதிர்கால இந்தியா-இலங்கை கூட்டுறவு என்பது,  'தொடர்பினை மேம்படுத்தல், செழுமையை ஊக்குவித்தல்: இந்தியா-இலங்கை பொருளாதார பங்குடைமையின் தொலைநோக்கு' எனப்பெயரிடப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து முக்கிய தூண்களுக்கு இணங்க இணைப்பு மற்றும் முதலீட்டில் முதன்மையாக கவனம் செலுத்தப்படும் என்பது இரு தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனக்குறிப்பிட்டார்.

இந்தியாவிலுள்ள இலங்கைக்கான இராஜதந்திர தூதர் பணிகளுக்காக, 2021 இல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த நாட்டின் மூலோபாயத்தின், முக்கிய கருப்பொருள் சார்ந்த பகுதிகளையும் உயர் ஸ்தானிகர் மொரகொட விளக்கினார். இதுவரையான காலத்தை பின்னோக்கிப் பார்த்து, அதன் நோக்கங்களை அடைவதில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் கவனித்திருந்தார்.

வருகை தந்த SLNDC தூதுக்குழு, பிரிகேடியர் டப்லிவ். ஏ.எஸ்.ஆர். விஜேதாச  WWV RSP USP ndc psc இன் தலைமையில், சிரேஷ்ட இயக்குனர்ப்  பணியாளர்கள் (இராணுவம்), முப்படை மற்றும் இலங்கை காவல்துறையின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கியது.

புத்திஜீவிகள் மூல, நாட்டின் தேசிய பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு, அரசாங்க ஆளுமை, இராஜதந்திரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய துறைகளில் எதிர்கால கொள்கை வகுப்பாளர்களை உருவாக்க இலங்கையின் முதன்மையான மூலோபாய கல்வி நிறுவனமாக, நவம்பர் 2021 இல் நிறுவப்பட்ட, SLNDC விளங்குகிறது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

புது டில்லி

18 செப்டம்பர் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close