பிராந்தியத்திலுள்ள இலங்கையர்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பணியாற்றி வருகின்றன

பிராந்தியத்திலுள்ள இலங்கையர்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பணியாற்றி வருகின்றன

வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் இணைந்து, வெளிநாடுகளிலுள்ள இலங்கை சமூகத்தினருடன் தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் நெருக்கமாக ஈடுபட்டு வருவதுடன், கோவிட் - 19 நோய்த்தொற்று தொடர்பில் பிராந்தியத்திலுள்ள இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காகவும், வசதிகளை மேற்கொள்வதற்காகவும் செயற்பட்டு வருகின்றன. நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்காகவும், அனைத்து நேரங்களிலும் நலன்களை உறுதி செய்வதற்காகவும் இலங்கை மாணவர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டிலுள்ளவர்களின் தூதரக வாரியான தரவுகள் தூதரகங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன.

கோவிட் - 19 தொடர்பான அபாயம் குறைவடையும் வரை, வெளிநாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தற்போது தாங்கள் இருக்கும் இடங்களிலேயே தங்கியிருக்குமாறு அண்மைய அறிவிப்பின் மூலமாக கோரியுள்ள இலங்கை அரசாங்கம், நாடு திரும்புவதற்காக இலங்கையர்களால் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள், நாட்டில் வைரஸ் பரவும் நிலைமை சீரடைந்த பின்னர் பரிசீலிக்கப்படும் என மேலும் உறுதியளித்துள்ளது.

அதே வேளை, புதுடில்லி, சென்னை, மும்பை, காத்மண்டு, இஸ்லாமாபாத், டாக்கா, காபூல் மற்றும் மாலே ஆகிய இடங்களிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் 'தொலைபேசி அழைப்பு இலக்கங்கள்' மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் ஆகியவற்றை நிறுவியுள்ளதுடன், உள்நாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக, தற்போது தங்கியிருக்கும் இடங்களில் பாதுகாப்பான சூழலில் தங்கியிருப்பதற்கு உதவுவதற்காகவும், வெவ்வேறு இடங்களிலுள்ள இலங்கையர்கள் உணவு மற்றும் ஏனைய தேவைகளை அணுகிக் கொள்வதனை உறுதி செய்வதற்காகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகளுடன் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தூதரகங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதுடன், தேவைக்கேற்ப வீசா நீடிப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக தலையீடுகளை மேற்கொண்டு, அனுமதிகளைக் கோரியுள்ளன. கையடக்கத் தொலைபேசி சாதனங்கள் மூலமாக கோவிட் - 19 விழிப்புணர்வு தொடர்பான செய்திகளை சிங்கள மொழியில் இலங்கை சமூகத்தினருக்கு வழங்குவதற்கான பணிகளில் உள்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன. சில நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னறிவிப்புச் செய்யப்பட்ட பூட்டுதல் நடவடிக்கைகள் காரணமாக, சமூகத்தினருக்கான சேவைகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக இராஜதந்திர ஊழியர்களின் இல்லங்களில் பிரதி அலுவலகங்களை அமைப்பதற்கும், வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கும்  தேவையான நடவடிக்கைகளை இந்தத் தூதரகங்கள் முன்னெடுத்துள்ளன.

இந்த நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் அதிக எண்ணிக்கையிலான இலங்கை மாணவர்கள் விடுதி, சிற்றுண்டிச்சாலை மற்றும் மருத்துவ வசதிகளை தொடர்ந்தும் அணுகிக் கொள்வதனை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுடன் இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் தொடர்புகளை மேற்கொண்டு வருவதுடன், மாணவர் குழுக்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளைப் பேணி வருகின்றன. மாணவர்களின் விடுமுறைகள் மற்றும் பரீட்சைகளை மாற்றியமைப்பதன் மூலமாக மாணவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள், கல்வித் துறைத் தலைவர்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுடன் இந்தத் தூதரகங்கள் மேலும் கலந்துரையாடி வருகின்றன. கொடுப்பணவுத் தொகைகள் தடையின்றி கல்வியியலாளர்களை சென்றடைவதை உறுதி செய்வதிலும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிராந்தியக் கண்ணோட்டத்தில், கோவிட் - 19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக உறுப்பு நாடுகளின் தன்னார்வமான பங்களிப்புடன் சார்க் கோவிட் - 19 அவசர நிதியை நிறுவுவதற்காக சார்க் தலைவர்கள் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்ததுடன், குறித்த நிதியில் இலங்கை வழங்கிய 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதித் தொகையும் உள்ளடங்கும்.

மேலும், இலங்கையின் மருத்துவ சேவைகளை வலுப்படுத்துவதற்காகவும், தற்போதைய பொது சுகாதார அவசரநிலையை கருத்தில் கொண்டு, தடையின்றி மருந்துகளை வழங்குதல் மற்றும் தயார்நிலையில் இருத்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவும், ஜி-டு-ஜி கொள்வனவு முறைமையின் கீழ் மருந்தகப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஏற்கனவே தெற்காசிய நாடுகளின் இருதரப்பு ஆதரவையும், உதவிகளையும் கோரியுள்ளது.

கோவிட் - 19 தொற்றுநோய் நிலைமை போன்ற அவசரமான காலங்களில், இலங்கை அரசாங்கம் உலகளவில் சென்றடைவதற்கும், உதவிகளை வழங்குவதற்கும் உதவும் மேலதிக நடவடிக்கையாக, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்ட 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு வெளிநாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. இந்த இணைய முகப்பானது கடந்த வாரம் அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

31 மார்ச் 2020

 

Please follow and like us:

Close